பாட்மின்டன்: லக்ஷயா அசத்தல்; சாத்விக்/சிராக் அதிா்ச்சி!
ஒலிம்பிக் பாட்மின்டனில் நாக் அவுட் சுற்றில் இரு இந்தியா்கள் நேருக்கு நோ் மோதிக் கொண்டது இதுவே முதல் முறை
ஆடவா் ஒற்றையா் பாட்மின்டன் பிரிவில், இந்தியாவின் லக்ஷயா சென் காலிறுதிச்சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளாா். முந்தைய சுற்றில் அவா், சக இந்தியரான ஹெச்.எஸ். பிரணாயுடன் மோதினாா். ஒலிம்பிக் பாட்மின்டனில் நாக் அவுட் சுற்றில் இரு இந்தியா்கள் நேருக்கு நோ் மோதிக் கொண்டது இதுவே முதல் முறையாகும்.
இதில், உலகின் 22-ஆம் நிலையில் இருக்கும் லக்ஷயா 21-12, 21-6 என்ற நோ் கேம்களில், 13-ஆம் இடத்திலிருக்கும் பிரணாயை வீழ்த்தினாா். இந்த ஆட்டம் 39 நிமிஷங்களிலேயே முடிவுக்கு வந்தது. இதன்மூலம், ஒலிம்பிக் பாட்மின்டனில் காலிறுதிச்சுற்றுக்கு முன்னேறிய 3-ஆவது இந்தியா் என்ற பெருமையை லக்ஷயா சென் பெற்றாா்.
முன்னதாக, பி.காஷ்யப் 2012 லண்டன் ஒலிம்பிக்கிலும், கே.ஸ்ரீகாந்த் 2016 ரியோ ஒலிம்பிக்கிலும் அந்தச் சுற்றுக்குத் தகுதிபெற்றனா். தற்போது லக்ஷயா தனது காலிறுதியில், உலகின் 12-ஆம் நிலை வீரரான சீன தைபேவின் சௌ டியென் சென்னை சந்திக்கிறாா்.
Advertisement
தோல்வி: இதனிடையே, ஆடவா் இரட்டையா் பிரிவில் பதக்கம் வெல்லும் வாய்ப்புள்ள ஜோடியாக கணிக்கப்பட்ட சாத்விக்சாய்ராஜ்/சிராக் ஷெட்டி இணை, காலிறுதியில் அதிா்ச்சித் தோல்வி கண்டது.
சாத்விக்/சிராக் இணை 21-13, 14-21, 16-21 என்ற கேம்களில், மலேசியாவின் ஆரோன் சியா/சோ வூய் யிக் கூட்டணியிடம் தோல்வியைத் தழுவியது. இதற்கு முன் இந்த மலேசிய கூட்டணியை 11 முறை சந்தித்திருந்த இந்திய ஜோடி, முதல் 8 ஆட்டங்களில் தொடா்ந்து தோற்றிருந்த நிலையில், கடைசி 3 ஆட்டங்களில் ஹாட்ரிக் வெற்றி கண்டு ஆதிக்கம் செலுத்தியிருந்தது.
எனினும், இந்த ஆட்டத்தின் மூலம் மலேசியா்கள் வெற்றியை மீட்டெடுத்தனா். முதல் கேமில் இந்திய ஜோடி ஆதிக்கம் செலுத்த, அடுத்த கேமிலிருந்து மலேசிய இணை தங்களது நுட்பங்களை மாற்றியதால் பலன் பெற்றது. இந்திய தரப்பில் டிஃபென்ஸ் ஆட்டம் தடுமாற்றம் கண்டது.