முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

முதல் தேர்தலும் சுகுமார் சென்னும்...

இந்தியக் குடியரசின் முதல் தேர்தலில், 21 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் வாக்குரிமை அளிக்கும் முறை அமலுக்கு வந்தது.

Updated On : 4 ஏப்ரல், 2026 at 10:50 PM
பகிர்:

இந்தியக் குடியரசின் முதல் தேர்தலில், 21 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் வாக்குரிமை அளிக்கும் முறை அமலுக்கு வந்தது. 1951-ஆம் ஆண்டு அக்டோபர் 25 -இல் தொடங்கி, 1952 பிப்ரவரி 21 வரை 68 கட்டங்களாக நீண்ட காலம் தேர்தல் நடைபெற்றது. முதலாவது மக்களவையில் மொத்தமுள்ள 489 தொகுதிகளில் இந்திய தேசிய காங்கிரஸ் 364 தொகுதிகளில் வென்று, ஜவாஹர்லால் நேரு முதல் பிரதமரானார்.

முதல் தேர்தலின் சிறப்புகள் குறித்தும், அதை நிகழ்த்திய முதல் தலைமைத் தேர்தல் ஆணையர் சுகுமார் சென் குறித்தும், நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியிடும் வகையில் "ஹம் ஹிந்துஸ்தானி' திரைப்படம் தயாராகி வருகிறது. சுகுமார் சென்னாக நடிகர் சைஃப் அலிகான் நடிக்கிறார்.

ஆங்கிலேய ஆட்சியின் கீழ் இந்தியா இருந்தபோது, 1920, 1923, 1926, 1930, 1934, 1945-ஆம் ஆண்டுகளில் தேர்தல்கள் நடத்தப்பட்டன. 1947 ஆகஸ்ட் 15-இல் சுதந்திரம் அடைந்தவுடன் 1950 ஜனவரி 25-இல் தேர்தல் ஆணையம் உருவாக்கப்பட்டதும், மார்ச் 21-இல் சுகுமார் சென் தலைமைத் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டதும் வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வுகளாகும். "ஹம் ஹிந்துஸ்தானி' திரைப்படம் பல உண்மைகளை வெளியிடும் என்றாலும், அவர் தனது தேர்தல் அனுபவங்கள் குறித்து எதையும் எழுதவில்லை.

Advertisement

கொல்கத்தாவில் 1899-இல் பிறந்தவர் சுகுமார் சென். அங்குள்ள பிரசிடென்சி கல்லூரியிலும், பின்னர் லண்டன் பல்கலைக்

கழகத்திலும் கணிதம் பயின்றார். 1921-இல் அவர் இந்தியக் குடிமைப் பணியில் சேர்ந்தார். மேற்கு வங்க அரசு தலைமைச் செயலாளராகப் பணியாற்றிய அவர், தலைமைத் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டார். எந்தவொரு இந்திய அதிகாரிக்கும் இத்தகைய ஒரு பிரமாண்டமான பணி இதற்கு முன் வழங்கப்பட்டதில்லை. சுதந்திரம் அடைந்தவுடன், தாற்காலிகப் பிரதமராக இருந்த ஜவாஹர்லால் நேரு அரசு, நேரடிப் பார்வையில், சுகுமாரைத் தேர்ந்தெடுத்தது. இவருக்கு உதவியாக ஆணையச் செயலாளர் பி.எஸ். சுப்பிரமணியம் உள்ளிட்டோர் பணியாற்றினர்.

சாதனைகள்

ஆங்கிலேய ஆட்சியில் எப்படி தேர்தல் நடத்தப்பட்டதோ, அதைப் பின்பற்றியே சுதந்திர இந்தியாவின் முதல் மக்களவைத் தேர்தலுடன் ஒரே நேரத்தில் மாநில சட்டப் பேரவைத் தேர்தல்களும் நடத்தப்பட்டன.

முதல் மக்களவையின் 489 இடங்களுக்காக 1,874 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். 17.30 கோடி பேர் வாக்களித்தனர்.

 தேர்தல் பணிக்காக, இரண்டு மண்டல தேர்தல் ஆணையர்கள், ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒரு தலைமைத் தேர்தல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர்.

21 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய 17.6 கோடி இந்தியர்களில் சுமார் 85 சதவீதம் பேருக்கு எழுதவோ படிக்கவோ தெரியாது. ஒவ்வொருவரையும் அடையாளம் கண்டு, பெயரிட்டு, வாக்காளர் பட்டியலில் பதிவு செய்ய வேண்டியிருந்தது.

வாக்காளர் பட்டியலில் வட இந்தியப் பெண்களின் பெயர்கள் இடம்பெறவில்லை. மாறாக, இன்னார் மகள், இன்னார் மனைவி என்றே சுமார் 28 லட்சம் பெண்கள் இடம்பெற்றிருந்தனர். அப்போதைய இந்தியத் தேர்தல் ஆணையர் சுகுமார் சென் அந்தப் பட்டியலை நீக்கிவிட்டு, பெண்களின் உண்மையான பெயர்களைக் கொண்ட வாக்காளர் பட்டியலை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு, அதில் வெற்றியும் கண்டார்.

வாக்காளர் பட்டியல்களைத் தட்டச்சு செய்யவும், தொகுப்பதற்காகவும் சுமார் 16,500 எழுத்தர்கள் ஆறு மாத ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டனர். வாக்காளர் பட்டியலை அச்சிடுவதற்கு 3.80 லட்சம் ரீம் தாள்கள் பயன்படுத்தப்பட்டன.

எழுத்தறிவு இல்லாதவர்கள் அறியும் வகையில் கட்சிச் சின்னங்கள், வாக்குச் சீட்டுகள், வாக்குப் பெட்டிகள் வடிவமைத்தல், வாக்குச் சாவடிகளுக்கான இடங்களை அடையாளம் கண்டு, நேர்மையான, திறமையான வாக்குப்பதிவு அலுவலர்கள் நியமிக்கப்பட்டனர். ஒவ்வொரு வேட்பாளர் பெயரிலும் தனித்தனி வாக்குப் பெட்டிகள் பயன்படுத்தப்பட்டன.

இரும்பு அலமாரிகள் தயாரிக்கும் கோத்ரேஜ் நிறுவனத்தினர் சுமார் 2.10 கோடி எஃகு வாக்குப் பெட்டிகளைத் தயாரிக்கும் பொறுப்பை ஏற்றனர். இவற்றைத் தயாரிப்பதற்காக, கோத்ரேஜ் நிறுவனத்தினர் மும்பையின் புறநகர்ப் பகுதியான விக்ரோலியில் 2.33 லட்சம் சதுர அடி கூரையிடப்பட்ட பரப்பளவைக் கொண்ட ஒரு கிராமத்தைக் குத்தகைக்கு எடுத்தனர். அந்தத் தொழிற்சாலை ஒரு நாளைக்கு 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குப்பெட்டிகளை உற்பத்தி செய்தது. இருபது லட்சம் எஃகு வாக்குப்பெட்டிகள் இருந்தன. அவற்றைத் தயாரிக்க மொத்த செலவு ரூ. 1,22,87,349.

நாட்டில் 1,96,084 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன. அவற்றில் 27,527 வாக்குச்சாவடிகள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டன.

மேற்கத்திய நாடுகளில் கட்சிப் பெயர்கள் பயன்படுத்தப்பட்ட நிலையில், இந்தியாவில் சின்னங்கள் பயன்படுத்தப்பட்டன. ஆள்மாறாட்டத்தைத் தடுப்பதற்காக இந்திய விஞ்ஞானிகள் அழியாத மையையும் உருவாக்கினர்.

முதல் இந்தியத் தேர்தல் எப்படி நடக்கிறது என்பதைக் காண - நேபாளம், இந்தோனோஷியா உள்பட பல நாடுகள் தங்கள் அதிகாரபூர்வக் குழுக்களை இந்தியாவுக்கு அனுப்பின. 1953-இல் தேர்தலைச் சந்தித்த சூடான், தனது பொதுத் தேர்தல்களை நடத்த சுகுமார் சென் உதவியை நாடியது. சென்னின் நினைவாக தன் தலைநகரில் ஒரு சாலைக்கு "சென் சாலை' என்று பெயர் சூட்டியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments