FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நடுப்பக்கக் கட்டுரைகள்

மண் வளத்தில் கூட்டணி நிர்பந்தம்!

ஆரோக்கியமான தலைமுறையை உருவாக்கவும், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும் இயற்கைமுறை விவசாயம் காலத்தின் கட்டாயம்.

Updated On : 26 மே 2026, 2:19 am IST
மண் வளத்தில் கூட்டணி நிர்பந்தம் - பிரதிப் படம்
பகிர்:

இயற்கை விவசாயத்தின் நன்மைகள் குறித்து இன்று பரவலாகப் பேசப்படுகிறது; அனைவரும் நஞ்சில்லா உணவையே விரும்புகின்றனர். ஆனால், கள எதார்த்தம் முற்றிலும் வேறாக உள்ளது.

ஒருபுறம் இயற்கை விவசாயம் குறித்த விழிப்புணர்வு அதிகரித்தாலும், மறுபுறம் கிராமப்புற உரக்கடைகளில் ரசாயன உரங்களை வாங்குவதற்காக காத்திருக்கும் விவசாயிகளின் கூட்டம் இன்னும் குறைந்தபாடில்லை.

இந்தியா முழுவதும் சுமார் 23 லட்சம் விவசாயிகள் இயற்கை விவசாயத்துக்கு மாறியிருப்பதாக தரவுகள் தெரிவிக்கின்றன. அதாவது 73 லட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பு இயற்கை வேளாண்மையின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. ஆனால், 140 கோடி மக்கள்தொகை கொண்ட தேசத்தின் மொத்த சாகுபடி பரப்பளவில் இது வெறும் 5 சதவீதத்துக்கும் குறைவு. மீதமுள்ள 95 சதவீதத்துக்கும் அதிகமான விவசாய நிலங்கள் வீரியமிக்க ரசாயன உரங்களின் பிடியிலிருந்து மீளவில்லை.

Advertisement

Advertisement

உலக அளவில் சீனாவுக்கு அடுத்தபடியாக யூரியாவை அதிகம் பயன்படுத்தும் இரண்டாவது நாடாக இந்தியா உள்ளது. ஆண்டுதோறும் 600 முதல் 650 லட்சம் மெட்ரிக் டன் ரசாயன உரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

மண்ணின் வளத்தைப் பாதுகாக்க, தழை, மணி, சாம்பல் சத்துகள் முறையே 4:2:1 என்ற விகிதத்தில் இருக்க வேண்டும் என்பது வேளாண் வல்லுநர்களின் பரிந்துரை. ஆனால், 2024-25ஆம் ஆண்டின் பொருளாதார ஆய்வறிக்கையோ, இந்தியாவின் தற்போதைய உரப் பயன்பாட்டு விகிதம் 10.9:4.1:1 என்ற அபாய நிலையை எட்டியுள்ளதாக எச்சரிக்கிறது.

யூரியா அதிக மானியத்தில் மலிவாகக் கிடைக்கிறது என்பதற்காக, ஒரு கிலோ பொட்டாஷுக்கு பதிலாக சுமார் 11 கிலோ யூரியா வயல்களில் கொட்டப்படுகிறது. ஆனாலும், எதிர்பார்த்த விளைச்சல் கிடைப்பதில்லை. 1970-இல் பசுமைப் புரட்சி தொடங்கிய காலகட்டத்தில், ஒருகிலோ உரத்துக்கு 13 கிலோவாக கிடைத்த தானிய மகசூல், 2010-இல் 4 கிலோவாகவும், 2025-இல் 2.5 முதல் 3 கிலோவாகவும் வீழ்ச்சியடைந்துள்ளது.

இதற்கான அடிப்படை காரணம் மண்ணின் வளம் குன்றியதைத் தவிர வேறொன்றுமில்லை. இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் தரவுகளின்படி, இந்தியாவில் சுமார் 30 சதவீத விவசாய நிலங்கள் தரம் குறைந்து, அமிலத்தன்மை அடைந்துவிட்டன. ஆரோக்கியமான மண்ணில் குறைந்தபட்சம் ஒரு சதவீதமாவது இருக்க வேண்டிய கரிமச்சத்து இன்று பல பகுதிகளில் 0.3 சதவீதத்துக்கும் கீழாகக் குறைந்துவிட்டது.

அதிகப்படியான யூரியா பயன்பாட்டால் மண்ணிலிருந்து வெளியாகும் நைட்ரஸ் ஆக்சைடு, கார்பன் டை ஆக்சைடைவிட சுமார் 300 மடங்கு வீரியமான பசுமைக்குடில் வாயுவாக உருவெடுத்து, புவி வெப்பமடைதலுக்கும் கணிசமான பங்காற்றுகிறது.

அதேபோல 330-க்கும் மேற்பட்ட பூச்சிக்கொல்லி மூலக்கூறுகள் விவசாயப் பயன்பாட்டில் பயன்படுத்தப்படுகின்றன.

ரசாயன உரங்களுக்கு பழகிப்போன மண்ணை இயற்கை விவசாயத்துக்கு மாற்றினால், முதல் மூன்று ஆண்டுகளில் 20 முதல் 30 சதவீதம் வரை கடுமையான மகசூல் இழப்பு ஏற்படும்; ஆனாலும், ஆரோக்கியமான தலைமுறையை உருவாக்கவும், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும் இயற்கைமுறை விவசாயம் காலத்தின் கட்டாயம்.

இந்த முன்னெடுப்பை சிக்கிம் மாநிலம் செயல்படுத்தி வருகிறது. அங்கு நுகர்வோரின் தேவையை முழுமையாக நிறைவு செய்யமுடியவில்லை என்றாலும், பொருளாதார இழப்பை விவசாயிகள் சந்தித்தாலும் இயற்கைமுறை விவசாயத்துக்கே அங்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

2025-26 ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் ரசாயன உர மானியத்துக்காக சுமார் ரூ. 1.67 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டது. 2026-ஆம் ஆண்டின் காரீப் பருவத்துக்கு (ஜூன் முதல் செப்டம்பர் வரை) டிஏபி உள்ளிட்ட பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் உரங்களுக்கு மட்டும் ரூ. 41,533.81 கோடியை மானியமாக வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

சர்வதேச சந்தையில் உரம் மற்றும் கச்சா பொருள்களின் விலை உயர்ந்தாலும், விவசாயிகளுக்கு ஒரு மூட்டை டிஏபி உரம் எவ்வித மாற்றமும் இன்றி ரூ. 1,350க்கு கிடைக்கும் வகையில் இந்த மானியம் உயர்த்தப்பட்டுள்ளது.

ஆனால், அதே அளவு ஊக்கமோ, மானியமோ இயற்கை உரம் தயாரிக்கும் விவசாயிகளுக்குக் கிடைப்பதில்லை. எனினும், இந்த ரசாயனப் பயன்பாட்டைக் குறைக்க திரவ வடிவிலான நானோ யூரியா, நானோ டிஏபி போன்ற நவீன மாற்று முயற்சிகளையும், ரசாயன உரங்களைக் குறைக்கும் மாநிலங்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும்"பி.எம். பிரணாம்' போன்ற திட்டங்களையும் மத்திய அரசு தீவிரமாக முன்னெடுத்து வருவது ஆறுதல் அளிக்கிறது.

அதேபோல மண்ணின் வளம் குறைந்துவருவதை உணர்ந்த விவசாயிகள், அடியுரமாக சாண எரு போன்ற இயற்கை உரங்களைப் பயன்படுத்தி கொண்டு, அவசரத் தேவைக்கு மட்டும் குறைந்த அளவில் ரசாயன பூச்சிக்கொல்லிகளைத் தெளிக்கும் ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு மாறி வருவது வரவேற்கத்தக்கது.

இயற்கை விவசாயம் குறித்து பேசப்படுவது ஒரு விழிப்புணர்வுக்கான தொடக்கமாக இருந்தாலும், அது முழுமையான செயல்பாட்டுக்கு வரவேண்டும் என்றால் நுகர்வோர் இயற்கை விளைபொருள்களுக்கு நியாயமான விலையை கொடுக்க முன்வருவதும், உர மானியத்தின் ஒரு பகுதியை இயற்கை விவசாயிகளுக்கு ஊக்கத்தொகையாகவும், காப்பீடாகவும் அரசு வழங்குவதும் அவசியமாகும்.

அதுவரை, நிலத்தில் ரசாயனம் தெளிக்கப்படுவது விவசாயியின் பிழையாக கருதமுடியாது; மாறாக வளம் குன்றிய மண், உணவுப் பாதுகாப்பு, லாபத்தை மட்டுமே நம்பியிருக்கும் சந்தைப் பொருளாதாரம் ஆகிய மூன்றும் இணைந்து உருவாக்கிய கூட்டான நிர்ப்பந்தமே தவிர வேறு காரணம் இருக்க முடியாது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments