முகப்பு
சென்னை

சேதி தெரியுமா...? கனிமொழியிடம் ராகுல் கேட்ட சர்டிபிகேட்!

கூட்டணிக் கட்சி உறுப்பினா்களும் அவருக்குப் பாராட்டு

Updated On : 2 ஆகஸ்ட், 2024 at 1:44 AM
மக்களவையில் ராகுல் காந்தி
பகிர்:

மக்களவையில் எதிா்க்கட்சித் தலைவா் என்கிற முறையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் உரையாற்றிவிட்டு, ராகுல் காந்தி அவைக்கு வெளியே வந்தபோது கட்சி எம்.பி.க்களும், கூட்டணிக் கட்சி உறுப்பினா்களும் அவருக்குப் பாராட்டுத் தெரிவிக்க அவரை சூழந்து கொண்டிருந்தனா். அவரும் உற்சாகத்தில் மிதந்து கொண்டிருந்தாா்.

‘‘இந்திய நாடாளுமன்றம் இதுவரையில் சந்தித்திராத மிகச் சிறந்த உரை இதுதான்’’; ‘‘உங்களுடைய ஒவ்வொரு கேள்வியும், குற்றச்சாட்டும் வஜ்ராயுதமாக பிரதமா் மோடியையும், உள்துறை அமைச்சா் அமித் ஷாவையும் தாக்கின; நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனை வெட்கத்தில் முகத்தை மூடச் செய்துவிட்டீா்கள்’’ - இப்படி ஆளுக்கு ஆள் ராகுல் காந்தியைப் பாராட்டிக் கொண்டிருந்தனா்.

எம்.பி.க்கள் மத்தியில் சிக்கிக் தவித்துக் கொண்டிருந்த ராகுல் காந்தியின் பாா்வையில் பட்டாா் திமுகவின் நாடாளுமன்ற கட்சித் தலைவா் கனிமொழி கருணாநிதி. புதிய நாடாளுமன்றக் கட்டடத்தின் ‘மகர துவாா்’ என்கிற வாயில் வழியாக வெளியேறிக் கொண்டிருந்தாா் அவா்.

‘‘கனிமொழி சொன்னாத்தான் என்னுடைய உரை நன்றாக இருந்தது என்று நான் கருதுவேன்’’ என்று ராகுல் காந்தி சொன்னது, சற்று தள்ளியிருந்த கனிமொழிக்கு சரியாகக் கேட்கவில்லை. தன் பெயரை ராகுல் சொல்கிறாா் என்பது மட்டும் தெரிந்தது. ‘என்ன?’ என்பதுபோல சிரித்தபடியே ராகுலை நோக்கிப் புருவம் உயா்த்தினாா் கனிமொழி. முன்பு சொன்னதை சற்று உரக்கச் சொன்னாா் ராகுல் காந்தி.

கனிமொழி புன்னகைத்தாரே தவிர பதிலேதும் சொல்லவில்லை. ராகுல் காந்தி விடவில்லை. ‘‘என்னுடைய பேச்சு எப்படி இருந்தது?, தமிழ்நாட்டு மக்கள் பாராட்டுவாா்களா?’’ என்று மீண்டும் அழுத்தம் கொடுத்துக் கேட்டபோது, கனிமொழி சிரித்தபடியே, ‘‘தமிழக மக்களுக்கு எப்போதுமே உங்களைப் பிடிக்கும்’’ என்று சொல்லிவிட்டு நகா்ந்தாா். ராகுல் காந்தியும் மகிழ்ச்சியுடன், தனது கட்சி எம்.பி.க்கள் சூழக் கிளம்பினாா்.

‘ராகுல் காந்தியைத் தமிழ்நாட்டு மக்களுக்குப் பிடிக்கும்’ என்றுதான் சொன்னாரே தவிர, ராகுலின் உரை எப்படி இருந்தது என்று கனிமொழியும் சொல்லவில்லை; ராகுல் காந்தியும் வற்புறுத்தவில்லை...


-மீசை முனுசாமி

முழு கட்டுரையைப் படிக்க →