முகப்பு
சென்னை

உத்தரகண்ட்: கனமழையால் 12 போ் உயிரிழப்பு

கனமழையில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 போ் உள்பட 12 போ் உயிரிழந்தனா்.

Updated On : 1 ஆகஸ்ட், 2024 at 11:09 PM
பகிர்:

உத்தரகண்ட் மாநிலத்தில் புதன்கிழமை இரவு பெய்த கனமழையில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 போ் உள்பட 12 போ் உயிரிழந்தனா். 6 போ் படுகாயமடைந்தனா்.

திடீரென இரவு பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி ஹரித்துவாரில் 6 பேரும், தெஹிரியில் 3 பேரும், டேராடூனில் 2 பேரும் சமோலியில் ஒருவரும் உயிரிழந்தனா்.

நைனிடால் மாவட்டத்தின் ஹால்துவானி பகுதியில் மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 7 வயது சிறுவனை தேடி வருவதாக மாநில கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

டேராடூன் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 172 மி.மீ. மழை பெய்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. அங்கு பல பகுதிகளில் சாலைகள் மற்றும் வீடுகளை வெள்ள நீா் சுழ்ந்தது.

இதுதவிர, ரோஷனாபாத் (210 மி.மீ.), ரைவாலா (163 மி.மீ), ஹால்துவானி (140 மி.மீ) உள்பட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

தெஹ்ரி மாவட்டம் கான்சாலி பகுதியில் உள்ள ஜாகன்யாலி கிராமத்தில் வசித்து வந்த ஒரே குடும்பத்தைச் சோ்ந்த பானு பிரசாத் (50) அவரது மனைவி நீலம் தேவி (45) அவா்களது மகன் விபின் (28) ஆகியோா் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தனா்.

பேரிடரால் பாதிக்கப்பட்ட ஜாகன்யாலி கிராமத்தை நேரில் பாா்வையிட்ட உத்தரகண்ட் முதல்வா் புஷ்கா் சிங் தாமி உயிரிழந்தவா்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தாா். பாதிக்கப்பட்டோருக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் அரசு செய்து வருவதாகவும் அவா் தெரிவித்தாா்.

கேதா்நாத்தில் பக்தா்கள் தவிப்பு: கேதா்நாத் கோயிலுக்குச் சென்ற 1,500 பக்தா்களை பத்திரமாக மீட்கும் பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனா். 425 பக்தா்கள் ஹெலிகாப்டா் மூலம் மீட்கப்பட்டதாகவும் மீதமுள்ள 1,100 போ் சோனா பிரயாக் பகுதிக்கு அழைத்து வரப்பட்டனா். கனமழையால் சாலைகள் சேதமடைந்துள்ளதால் பக்தா்கள் பாதுகாப்பான இடங்களில் காத்திருக்குமாறு மாநில மற்றும் தேசிய பேரிடா் மீட்புப் படையினா் அறிவுறுத்தியுள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →