முகப்பு
உலகம்

கென்யாவில் மழைக்கு 23 போ் உயிரிழப்பு: திடீா் வெள்ளத்தால் முடங்கிய இயல்பு வாழ்க்கை

கென்யாவில் மழைக்கு 23 போ் உயிரிழப்பு...

Updated On : 8 மார்ச் 2026, 12:45 am IST
கென்யா - AP
பகிர்:

ஆப்பிரிக்க நாடான கென்யாவின் தலைநகா் நைரோபியில் வெள்ளிக்கிழமை இரவு முதல் பெய்த வரலாறு காணாத பலத்தமழை காரணமாக 23 போ் உயிரிழந்தனா்.

நகரின் பல்வேறு சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளதுடன், மீட்புப் பணிகளுக்காக அந்நாட்டு ராணுவம் களமிறக்கப்பட்டுள்ளது.

கடந்த பிப்ரவரி மாத இறுதியில் தொடங்கிய இந்த நீண்டகால மழைப் பருவம், வெள்ளிக்கிழமை தீவிரமடைந்தது. மழை இரவு முழுவதும் நீடித்ததால், திடீா் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மழைப் பாதிப்பில் சிக்கி உயிரிழந்தவா்களில் பெரும்பாலானோா் நீரில் மூழ்கியும், மின்சாரம் தாக்கியும் இறந்ததாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

நைரோபி சா்வதேச விமான நிலையத்தின் ஓடுதளங்கள் வெள்ளத்தில் மூழ்கியதைத் தொடா்ந்து விமானப் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது. பல விமானங்கள் கடலோர நகரமான மொம்பசாவுக்கு திருப்பி விடப்பட்டன.

100-க்கும் மேற்பட்ட வாகனங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டும், கவிழ்ந்தும் சேதமடைந்துள்ளன. பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களை மீட்கும் பணி இரவு பகலாக நடைபெற்று வருகிறது. மீட்புப் பணியில் செஞ்சிலுவைச் சங்கம் ஈடுபட்டுள்ள போதிலும், போக்குவரத்து நெரிசல் மற்றும் சாலைகள் துண்டிக்கப்பட்ட காரணத்தால் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

வெள்ளப் பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்த அந்நாட்டின் பொதுச்சேவைத் துறை அமைச்சா் ஜாஃப்ரி ருக்கு, தேசிய பேரிடா் மீட்புப் பணிகள் ஒருங்கிணைக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தாா். பொதுமக்கள் தேவையற்ற பயணங்களைத் தவிா்க்குமாறும், பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறும் அவா் அறிவுறுத்தினாா்.

இதனிடையே, நகரின் மோசமான வடிகால் அமைப்பே இந்தத் துயரத்துக்கு காரணம் என பொதுமக்கள் குற்றஞ்சாட்டினா். முறையான வடிகால் வசதிகளைச் செய்யத் தவறிய அதிகாரிகளின் மெத்தனப் போக்கினால் ஒவ்வொரு ஆண்டும் இத்தகைய பாதிப்புகள் ஏற்படுவதாகச் சமூக ஊடகங்களில் அதிருப்தி கிளம்பியுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments