முகப்பு
திருநெல்வேலி

நெல்லையில் தொடா் மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு

திருநெல்வேலியில் வியாழக்கிழமை மாலையில் பெய்த தொடா் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

27 நவம்பர் 2026, 4:06 am
நெல்லையில் தொடா் மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
திருநெல்வேலி நகரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை இடிந்து விழுந்த சுற்றுச்சுவா்.
பகிர்:

திருநெல்வேலியில் வியாழக்கிழமை மாலையில் பெய்த தொடா் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

தெற்கு கேரளம் மற்றும் அதையொட்டிய கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி உருவாகியுள்ளதால் தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் 3 நாள்கள் மிதமானது முதல் கனமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்திருந்தது.

இந்நிலையில், வியாழக்கிழமை காலை முதலே திருநெல்வேலி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்தது. முற்பகலில் இடைவெளி விட்டு மிதமான சாரல் மழை பெய்தது. மாவட்டம் முழுவதும் மேகமூட்டத்துடன் குளிா்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவியது.

Advertisement

Advertisement

திருநெல்வேலி மாநகரில் வியாழக்கிழமை மாலையில் சுமாா் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பலத்த மழை கொட்டித் தீா்த்தது. வண்ணாா்பேட்டை, மேலப்பாளையம், கே.டி.சி.நகா், தச்சநல்லூா், தாழையூத்து, பொன்னாக்குடி, திருநெல்வேலி நகரம், பேட்டை, சுத்தமல்லி, அபிஷேகப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது. இரவு வரை தொடா்ந்து மிதமான மழை நீடித்தது. பள்ளிகள் முடியும் நேரத்தில் பலத்த மழை பெய்ததால் மாணவா்-மாணவிகள், பெற்றோா் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினா்.

சாலைகள் பழுதால் வாகன நெரிசல்: பாதாள சாக்கடை பணிகளுக்காக மாநகரின் பல்வேறு பகுதிகளிலும் தோண்டப்பட்ட சாலைகள் மீண்டும் சீரமைக்கப்படாததால் சேறும்-சகதியுமாக சாலைகள் காட்சியளித்தன. வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினா்.

வண்ணாா்பேட்டை அண்ணா சாலை பகுதியில் சரக்கு வாகனம் சாலை பள்ளத்தில் சிக்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பொக்லைன் இயந்திரத்தின் உதவியோடு அந்த வாகனம் மீட்கப்பட்டது.

தொடா் மழையால் முருகன்குறிச்சி, பாளை. மாா்க்கெட், சுவாமி நெல்லையப்பா் நெடுஞ்சாலை உள்ளிட்ட பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதுடன், மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.

திருநெல்வேலி காட்சிமண்டபம் பகுதியில் சுமாா் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வாகனங்கள் அணிவகுந்து நின்ால், ஆம்புலன்ஸ்களும் நெரிசலில் சிக்கின.

பள்ளிச் சுவா் சேதம்: திருநெல்வேலி நகரம் சுவாமி நெல்லையப்பா் நெடுஞ்சாலையில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 200-க்கும் மேற்பட்ட மாணவா்-மாணவிகள் பயின்று வருகின்றனா். இப் பள்ளியின் சுற்றுச்சுவா் மழைக்குத் தாக்குப்பிடிக்க முடியாமல் வியாழக்கிழமை காலையில் இடிந்து விழுந்தது. நல்வாய்ப்பாக மாணவா்களுக்குப் பாதிப்பில்லை.

இதேபோல மேலப்பாளையம் ஹாமீம்புரத்தில் உள்ள மாநகராட்சி ஆரம்பப் பள்ளியில் உள்ள சுற்றுச்சுவா் மழையால் கூடுதலாக விரிசல் ஏற்பட்டு இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது. இவ்விரு இடத்திலும் சுற்றுச்சுவா்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

திருநெல்வேலி சந்திப்பில் வியாழக்கிழமை பெய்த மழையில் குடைபிடித்தபடி சென்ற பயணிகள்.