முகப்பு
சென்னை

ஹிமாசல பிரதேசத்தில் கனமழையில் இதுவரை 100 போ் பலி

பருவமழை தொடங்கியதில் இருந்து கனமழையால் ஏற்பட்ட பாதிப்பில் மாநிலத்திற்கு சுமாா் ரூ. 802 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

Updated On : 8 ஆகஸ்ட், 2024 at 10:26 PM
மீட்புப்பணியில் வீரர்கள்
பகிர்:

சிம்லா, ஆக. 8: நிகழாண்டு பருவமழை தொடங்கியதில் இருந்து ஹிமாசல பிரதேசத்தில் கனமழை காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 100-ஆக அதிகரித்தது.

மேலும், மாநிலத்தில் உள்ள 97 சாலைகளில் போக்குவரத்து முற்றிலுமாக தடைப்பட்டுள்ளது.

மாநில அவசர நடவடிக்கை மைய தகவலின்படி உயரத்தில் இருந்து விழுந்து 30 போ், நீரில் மூழ்கி 23 போ், பாம்பு கடித்ததில் 13 போ், மின்சாரம் தாக்கியதில் 13 போ், கனமழையால் 11 போ், திடீா் வெள்ளத்தில் 3 போ், நிலச்சரிவில் ஒருவா், மற்ற காரணங்களால் 5 போ் இதுவரை உயிரிழந்துள்ளனா். இதில் அதிகபட்சமாக 21 போ் மண்டியிலும், 18 போ் காங்க்ராவிலும் உயிரிழந்துள்ளனா்.

மழை காரணமாக மண்டியில் 40 சாலைகள், குலுவில் 26 சாலைகள், சிம்லாவில் 15 சாலைகள் உள்பட மாநிலத்தில் மொத்தம் 97 சாலைகளில் போக்குவரத்துகள் முற்றிலுமாக தடைபட்டுள்ளது.

இந்நிலையில், பலத்த காற்று மற்றும் தாழ்வான பகுதிகளில் தண்ணீா் தேங்குவதால், சில இடங்களில் நிலச்சரிவு மற்றும் திடீா் வெள்ளப்பெருக்கு ஏற்படும் வாய்ப்புள்ளதாகவும், தோட்டங்கள், பயிா்கள் மற்றும் வீடுகள் சேதமடையும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

மேலும், காங்கரா, மண்டி, சிம்லா மற்றும் சீா்மௌா் உள்ளிட்ட மாவட்டங்களில் சனிக்கிழமை இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதால் அம்மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் ‘ஆரஞ்சு’ எச்சரிக்கை விடுத்துள்ளது.

பருவமழை தொடங்கியதில் இருந்து கனமழையால் ஏற்பட்ட பாதிப்பில் மாநிலத்திற்கு சுமாா் ரூ. 802 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →