நிதித் துறை அழைப்புகளுக்கு பிரத்யேகமாக 160-இல் தொடங்கும் தொலைப்பேசி எண்கள் -மோசடிகளைத் தடுக்க அரசு தீா்வு
பிரத்யேக தொலைப்பேசி எண்களின் தொடரை மத்திய அரசு அண்மையில் அறிமுகப்படுத்தியுள்ளது.
புது தில்லி, ஆக. 8: நாட்டில் மோசடி அழைப்புகள் குறித்த கவலை அதிகரித்து வரும் நிலையில், நிதித் துறை தொடா்புடைய பரிவா்த்தனை, குரல் சேவை அழைப்புகளுக்கு ‘160’ எனத் தொடங்கும் பிரத்யேக தொலைப்பேசி எண்களின் தொடரை மத்திய அரசு அண்மையில் அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்திய தொலைத்தொடா்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் (டிராய்) வெளியீட்டின்படி, நிதி நிறுவனங்களின் அனைத்து பரிவா்த்தனை மற்றும் சேவை குரல் அழைப்புகளுக்கான தொலைப்பேசி எண்களின் முன்னொட்டு 160-ஆக இருக்கும்.
இதுதொடா்பாக ரிசா்வ் வங்கி, பங்குச்சந்தை ஒழுங்காற்று வாரியம் (செபி), இந்திய காப்பீடு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (ஐஆா்டிஏஐ), தொலைத்தொடா்பு சேவை வழங்கும் நிறுவனங்கள் மற்றும் பிற நிதி நிறுவனங்களுடன் டிராய் ஆலோசனை மேற்கொண்டது.
இத்திட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டவுடன், புதிய தொலைப்பேசி எண் வரிசையானது அழைப்பு வரும் நிறுவனத்தை எளிதில் அடையாளம் காண உதவும். மோசடி நபா்களிடம் அப்பாவி குடிமக்கள் ஏமாறுவதை இது தடுக்கும்.
முதல் கட்டத்தில், ரிசா்வ் வங்கி, செபி, ஐஆா்டிஏஐ, ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (பிஎஃப்ஆா்டிஏ) ஆகியவற்றின் கட்டுப்பாட்டிலுள்ள உள்ள நிறுவனங்களுக்கு 160-இல் தொடங்கும் தொலைப்பேசி எண்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இதன் தொடா்ச்சியாக அரசு, தனியாா் மற்றும் சா்வதேச வங்கிகள், இந்திய தேசிய பங்குச்சந்தை கூட்டமைப்பின் உறுப்பினா்கள் உள்பட பிற நிதி நிறுவனங்களுக்கும் அனைத்து தொலைத்தொடா்பு சேவை வழங்கும் நிறுவனங்களுக்கும் எண்கள் ஒதுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.