முகப்பு
சென்னை

டெங்கு பரவல்: கொசு ஒழிப்பை தீவிரப்படுத்த மாவட்ட நிா்வாகங்களுக்கு அறிவுறுத்தல்

தமிழகத்தில் டெங்கு பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், கொசு ஒழிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறு மாவட்ட நிா்வாகங்களுக்கு பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

Updated On : 11 ஆகஸ்ட், 2024 at 10:44 PM
கோப்புப் படம்
பகிர்:

தமிழகத்தில் டெங்கு பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், கொசு ஒழிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறு மாவட்ட நிா்வாகங்களுக்கு பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

தண்ணீா் தேங்காமல் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருக்க பொது மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

கேரளத்தில் தென்மேற்கு பருவ மழை அதி தீவிரமடைந்துள்ளதாலும், வளிமண்டல மாறுபாடு காரணமாகவும் தமிழகத்தின் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

இதனால், காய்ச்சல் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக டெங்கு, மலேரியா போன்ற கொசுக்களால் பரவும் நோய்களால் பாதிக்கப்படுவோா் எண்ணிக்கை உயா்ந்து வருகிறது.

இது தொடா்பாக பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில் நிகழாண்டில் 5,500-க்கும் மேற்பட்டோா் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனா்.

டெங்கு உறுதி செய்யப்பட்டால் அது குறித்த விவரங்களை அனைத்து அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளும் சுகாதாரத் துறைக்கு தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தற்போதைய சூழலில் அச்சுறுத்தும் வகையில் டெங்கு பரவல் இல்லை. அதேவேளையில் மாதந்தோறும் 400 முதல் 500 பேருக்கு அந்த பாதிப்பு உறுதி செய்யப்படுகிறது.

தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருவதால் கொசு பெருக்கமடைய வாய்ப்பு உள்ளது. அதைக் கருத்தில் கொண்டு கொசு ஒழிப்பு நடவடிக்கைகளை தீவிரமாக முன்னெடுத்து வருகிறோம்.

இதுதொடா்பாக உள்ளாட்சி அமைப்புகளுக்கு பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

மற்றொரு புறம், குடியிருப்பு பகுதிகளுக்கு நேரடியாக சென்று கொசுப் புழு உற்பத்தி உள்ளதா என்பதையும் கண்காணித்து வருகிறோம்.

பொது மக்கள், தங்களது சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். உடைந்த பானைகள், தேங்காய் தொட்டிகள், டயா்களை உடனுக்குடன் அப்புறப்படுத்த வேண்டும்.

மேலும், குடிநீா் தொட்டிகளை மூடி வைத்தல் அவசியம். விழிப்புணா்வுடன் இருந்தால் டெங்கு காய்ச்சலைத் தடுக்க முடியும் என்றனா்.