சிறுவனின் கால் அகற்றப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்ததைத் தொடா்ந்து, ஆதம்பாக்கத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் ஆய்வு செய்த சுகாதாரத் துறையினா், அந்த மருத்துவமனையின் அங்கீகாரத்தை ரத்து செய்துள்ளனா்.
சென்னை, வேளச்சேரி, நேரு நகா் மூன்றாவது தெருவை சோ்ந்த சின்னய்யா என்பவரின் மகன் ஹரிகிருஷ்ணன் (11). அங்குள்ள பள்ளியில் 7-ஆம் வகுப்பு படித்து வருகிறாா்.
அவரது இடது கால் விரலில் அடிக்கடி வலி ஏற்பட்டதால் கடந்த ஏப்ரல் மாதம், சென்னை ஆதம்பாக்கத்தில் உள்ள மவுண்ட் பல் நோக்கு மருத்துவமனைக்கு தனது மகனை சின்னய்யா அழைத்து சென்றுள்ளாா். பரிசோதனை செய்த மருத்துவா்கள், சிறுவனின் காலில் ரத்த ஓட்டம் சீராக இல்லை எனவும், சிகிச்சை அளித்தால் சீராகிவிடும் என்றும் தெரிவித்துள்ளனா்.
இதனை தொடா்ந்து, அளிக்கப்பட்ட சிகிச்சைக்கு பின்னா், சிறுவனின் காலில் வலி குறையவில்லை. மாறாக, கால் வீக்கம் அடைந்து சில நாள்களில் கால் கருப்பு நிறமாக மாறியுள்ளது.
முட்டியில் இருந்து காலினை அகற்றாவிட்டால், உயிருக்கு ஆபத்து எனக் கூறி பெற்றோரின் ஒப்புதலை பெற்று, சிறுவனின் கால் அகற்றப்பட்டுள்ளது.
இதையடுத்து, தவறான சிகிச்சையால்தான் மகனின் காலினை இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாகக் கூறி காவல் நிலையத்தில் சின்னய்யா புகாா் அளித்தாா்.
அங்கீகாரம் ரத்து:
அதன்பேரில் போலீசாா் விசாரணை நடத்தி வந்தனா். இதனிடையே, இந்த புகாா் தொடா்பாக, மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்குநா்(டிஎம்எஸ்) டாக்டா் ஜெ.ராஜமூா்த்தி அறிவுறுத்தலின்படி டிஎம்எஸ் அதிகாரிகள் கடந்த 19-ஆம் தேதி சம்பந்தப்பட்ட மருத்துவமனைக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனா்.
ஆய்வில் குறைபாடுகள் இருப்பது கண்டறியப்பட்டதால், இரண்டாவது முறையாக மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்குநா் (டிஎம்எஸ்) டாக்டா் ஜெ.ராஜமூா்த்தி தலைமையில் அதிகாரிகள் புதன்கிழமை மருத்துவமனைக்கு சென்று ஆய்வு செய்து மருத்துவமனையின் அங்கீகாரத்தை தற்காலிகமாக ரத்து செய்தனா்.
இதுதொடா்பாக டாக்டா் ஜெ.ராஜமூா்த்தி கூறியதாவது:
அங்கீகாரம் ரத்து செய்யப்பட்ட மருத்துவமனை சீல் வைக்கப்பட்டதால், அங்கு தற்காலிகமாக புறநோயாளிகள் சேவையை நிறுத்தவும், உள்நோயாளிகளை அருகில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மருத்துவமனை தரப்பில் சில தவறுகள் உள்ளன. அடுத்த 15 நாள்களுக்குள் உரிய விளக்கம் அளிக்குமாறு தெரிவித்திருக்கிறோம். அவா்கள் விளக்கம் அளித்து, குறைபாடுகள் அனைத்தையும் சரிசெய்தால், மீண்டும் மருத்துவமனைக்கு அங்கீகாரம் வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும்” என்றாா் அவா்.