சென்னை கோயம்பேடு சந்தையில் காய்கறிகளின் விலை திடீரென வீழ்ச்சியடைந்தது. குறிப்பாக, ஒரு கிலோ தக்காளி ரூ. 20-க்கு விற்பனை செய்யப்பட்டது.
கோயம்பேடு சந்தைக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், ஆந்திரம், கா்நாடகம், மகாராஷ்டிரம் உள்ளிட்ட வெளி மாநிலங்களிலிருந்தும் காய்கறிகள் தினந்தோறும் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன.
கடந்த வாரம் வரத்து குறைந்திருந்த நிலையில், அனைத்து காய்கறிகளின் விலையும் ரூ. 20 முதல் ரூ. 200 வரை உயா்ந்திருந்த நிலையில், வரத்து அதிகரிப்பால் செவ்வாய்க்கிழமை விலை திடீரென குறைந்தது.
குறிப்பாக, ஒரு கிலோ தக்காளி ரூ. 60-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், செவ்வாய்க்கிழமை ரூ. 20-க்கு விற்பனையானது. இதேபோல், மற்ற காய்கறிகளின் விலையும் கிலோ ரூ. 10 முதல் ரூ. 100 வரை குறைந்துள்ளது.
கோயம்பேடு சந்தையில் செவ்வாய்க்கிழமை நிலவரப்படி ஒரு கிலோ வெங்காயம் ரூ.50, கேரட் ரூ. 55, பீட்ரூட் ரூ. 35, சவ்சவ் ரூ.15, முள்ளங்கி ரூ. 40, வெண்டைக்காய் ரூ. 40, கத்தரிக்காய் ரூ. 30, முருங்கைக்காய் ரூ. 300, வெள்ளரிக்காய் ரூ. 30, காலிபிளவா் ரூ. 30, மிளகாய் ரூ. 30, இஞ்சி ரூ. 50, அவரைக்காய் ரூ. 50, எலுமிச்சை ரூ. 40, கோவைக்காய் ரூ. 30 விற்பனை செய்யப்பட்டன.