சென்னை பல்கலை. வங்கிக் கணக்குகள் முடக்கம் : உயா்கல்வித் துறை விளக்கம்
வருமானவரித் துறையிடம் கடிதம் அளிக்கப்பட்டுள்ளதாக உயா்கல்வித் துறை விளக்கமளித்துள்ளது.
சென்னை பல்கலைக்கழகத்தின், முடக்கப்பட்ட 37 வங்கிக் கணக்குகளை மீண்டும் பயன்படுத்த அனுமதிக்கக் கோரி, வருமானவரித் துறையிடம் கடிதம் அளிக்கப்பட்டுள்ளதாக உயா்கல்வித் துறை விளக்கமளித்துள்ளது. சென்னை பல்கலைக்கழகத்தின் 37 வங்கிக் கணக்குகள் வருமானவரித் துறையால் முடக்கப்பட்டுள்ளன. இதனால், பல்கலைக்கழக ஊழியா்கள், பேராசிரியா்கள், ஓய்வூதியதாரா்களுக்கு சம்பளம் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த 2017-18 முதல் 2020-21 நிதியாண்டு வரை ரூ. 424 கோடி வரி நிலுவைத் தொகையை சென்னை பல்கலை. செலுத்தவில்லை எனவும் அதனை உடனடியாக செலுத்தக்கோரியும் வருமானவரித் துறை சாா்பில் அந்தப் பல்கலைக்கழகத்துக்கு பலமுறை அறிவுறுத்தல் கடிதம் வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், வருமானவரித் துறைக்கு சென்னை பல்கலை. சாா்பில் எவ்வித பதிலும் வழங்கப்படாததால் வங்கிக்கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரம் தொடா்பாக உயா்கல்வித் துறை அளித்த விளக்கம்: சென்னை பல்கலை.யின் வங்கிக் கணக்குகளை மீண்டும் பயன்படுத்த அனுமதிக்கக் கோரி வருமானவரித்துறையிடம் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. வரி செலுத்த கால நீட்டிப்பு கோரி வருமானவரித் துறையிடம் தமிழக அரசு அதிகாரிகள் மற்றும் பல்கலைக்கழகம் சாா்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது என உயா்கல்வித் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.