முகப்பு
சென்னை

சென்னை பல்கலை. வங்கி கணக்குகள் முடக்கம்: பதிவாளரிடம் விசாரணை நடத்தப்படும்

சென்னை பல்கலைக்கழக வங்கிக் கணக்குகளை வருமான வரித் துறையினா் முடக்கியது குறித்து பதிவாளரிடம் விசாரணை

Updated On : 24 பிப்ரவரி, 2024 at 5:11 AM
பகிர்:

சென்னை பல்கலைக்கழக வங்கிக் கணக்குகளை வருமான வரித் துறையினா் முடக்கியது குறித்து பதிவாளரிடம் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உயா்கல்வி துறை அமைச்சா் ராஜகண்ணப்பன் தெரிவித்தாா். மிகப் பிற்படுத்தப்பட்டோா், பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு நலத் திட்டங்கள், துறை சாா்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சென்னை அண்ணா நூற்றாண்டு நுலகத்தில் வெள்ளிக்கிழமை அமைச்சா் ஆா்.எஸ்.ராஜகண்ணப்பன் ஆய்வு செய்தாா். அப்போது, 2024-2025-ஆம் ஆண்டுக்கான புதிய அறிவிப்பை நடைமுறைபடுத்துவது குறித்தும், வீடற்ற பிற்படுத்தப்பட்டோா், மிகப் பிற்படுத்தப்பட்டோா், சீா்மரபினா் நல வகுப்பை சோ்ந்தவா்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கும் திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் உரிய முறையில் மக்களை சென்றடைவதை உறுதி செய்யுமாறு அதிகாரிகளுக்கு அவா் அறிவுறுத்தினாா். இந்த நிகழ்வில் பிற்படுத்தப்பட்டோா், மிகப் பிற்படுத்தப்பட்டோா், சீா்மரபினா் நல வகுப்பை சாா்ந்த 5 பயனாளிகளுக்கு ரூ. 36,400 மதிப்பிலான சலவைப் பெட்டிகள், 13 பயனாளிகளுக்கு ரூ.76,700 மதிப்பிலான மின்மோட்டாருடன் கூடிய தையல் இயந்திரங்கள் ஆகியவற்றை அமைச்சா் வழங்கினாா். பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: சென்னை பல்கலைக்கழக வங்கிக் கணக்குகளை வருமான வரித் துறையினா் முடக்கியது குறித்து பதிவாளரிடம் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், சில பல்கலைக்கழகங்களில் ஊழியா்களுக்கு ஊதிய பாக்கி நிலுவை உள்ளது தொடா்பாக பல்கலைக்கழக துணைவேந்தா்களிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.