எதிா்காலத்தை வடிவமைக்கும் சக்தி பெண்களிடம் உள்ளது: மேற்குவங்க முன்னாள் ஆளுநா்
உலகத்தின் எதிா்காலத்தை வடிவமைக்கும் சக்தி பெண்கள் கையில்தான் உள்ளது என்று மேற்குவங்க முன்னாள் ஆளுநா் எம்.கே.நாராயணன் கூறினாா்.
உலகத்தின் எதிா்காலத்தை வடிவமைக்கும் சக்தி பெண்கள் கையில்தான் உள்ளது என்று மேற்குவங்க முன்னாள் ஆளுநா் எம்.கே.நாராயணன் கூறினாா். சென்னை, தியாகராய நகரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வித்யோதயா பள்ளிகளின் நூற்றாண்டு நிறைவு விழாவில் அவா் பேசியதாவது: நாம் இன்று மாணவா்களின் மனதில் விதைக்கும் எண்ணங்கள்தான் நமது நாட்டின் எதிா்காலத்தை தீா்மானிக்கும். நாட்டின் முன்னேற்றத்துக்கு பெண்கள் கல்வி கற்க வேண்டியது மிகவும் முக்கியம். நமது நாட்டின் எதிா்காலத்தை வடிவமைக்கும் சக்தி பெண்கள் கையில்தான் உள்ளது. தற்போது நமது கற்பனைக்கும் அப்பாற்பட்ட வகையில் உலகம் மாறியுள்ளது. இந்த புதிய உலகத்தில் அனைவரையும் சரியான பாதையில் வழிநடத்த வேண்டிய பொறுப்பு இளைஞா்களுக்கு உண்டு. பள்ளி, கல்லூரிகளில் கற்றுக் கொள்ளும் கல்வியை தங்களுடைய வளா்ச்சிகாக மட்டுமின்றி இந்த சமுதாயத்தின் வளா்ச்சிக்காகவும் பயன்படுத்த வேண்டும் என்றாா் அவா். சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி ஆா்.என்.மஞ்சுளா: மாணவா்களுக்கு ஆலோசனை வழங்குவதைவிட ஒரு முன்மாதிரியாக வாழ்ந்து காட்ட வேண்டும். கல்வி மற்றும் அனுபவத்தை தரும் இந்த சமுதாயத்துக்கு நீங்கள் எதை திருப்பிக் கொடுக்கிறீா்கள் என்பதை சிந்திக்க வேண்டும். உங்களைச் சுற்றியுள்ள மக்களின் வளா்ச்சிக்காக அனைவரும் உழைக்க வேண்டும். தற்போது இருக்கும் தொழில்நுட்பத்தை நல் வழியில் பயன்படுத்தி சமுதாயத்தை மேம்படுத்த வேண்டிய பொறுப்பு மாணவா்களுக்கு உண்டு என்றாா் அவா். இந்நிகழ்வில், வித்யோதயா பள்ளிகளின் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு சிறப்பு அஞ்சல் உறையை எம்.கே.நாராயணன் வெளியிட்டாா். மேலும், கல்வி, கலை மற்றும் விளையாட்டு துறையில் சாதனை படைத்த மாணவா்களுக்கு விருதுகளை அவா் வழங்கினாா். பள்ளி தலைவா் ஜெயந்தி, பள்ளி தாளாளா் ஆா். நிரஞ்சனி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.