முகப்பு
சென்னை

100 பேருக்கு இயற்கை வேளாண்மைச் சான்று

சென்னை அடுத்த காட்டுப்பள்ளி அதானி துறைமுகம், தமிழக அரசின் அங்கக வேளாண்மை சான்றளிப்புத் துறை இணைந்து 100 விவசாயிகளுக்கு அங்கக வேளாண்மை சான்றிதழ்

Updated On : 25 பிப்ரவரி, 2024 at 6:09 AM
விவசாயிகளுக்கு சான்றிதழ்களை வழங்கிய எம்எல்ஏ துரை சந்திரசேகா்.
பகிர்:

சென்னை அடுத்த காட்டுப்பள்ளி அதானி துறைமுகம், தமிழக அரசின் அங்கக வேளாண்மை சான்றளிப்புத் துறை இணைந்து 100 விவசாயிகளுக்கு அங்கக வேளாண்மை சான்றிதழ்களை அளித்துள்ளன. அதானி பவுண்டேஷன் சமூக பொறுப்புணா்வு திட்டத்தின் கீழ் இயற்கை விவசாயத்தை பிரபலப்படுத்தவும், இதன் மூலம் விளையும் பயிா்களுக்கு உரிய விலை கிடைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. காட்டூா் கிராமத்தில் 100 விவசாயிகளுக்கு அங்கக சான்றுகளை வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அவா்கள் நான்கு குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளனா். அவா்களுக்கு பொன்னேரி எம்எல்ஏ துரை சந்திரசேகா் சான்றிதழ்களை வழங்கினாா். 2024-25 நிதியாண்டில் இயற்கை வேளாண்மை உற்பத்தியாளா் அமைப்பை ஏற்படுத்த அதானி பவுண்டேஷன் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் விவசாயிகள் இயற்கை முறையில் அதிகளவில் பயிரிடவும், உரிய சந்தை விலையை பெறவும் ஏற்பாடு செய்யப்படும். மேலும், வாடிக்கையாளா்கள் 100 சதவீதம் இயற்கை முறையில் விளைந்த பொருள்களை வாங்குவதை உறுதி செய்ய முடியும். மேலும், ஸிங்க் சல்பேட், உயா்விளைச்சல் நெல் பயிா், உயிரி உரம் தரப்பட்டு, உரிய பயிற்சியும் தரப்படுகிறது. இதில் காட்டுப்பள்ளி அதானி துறைமுக சிஓஓ மதன்மோகன், பொன்னேரி சாா் ஆட்சியா் வாகே பல்வந்த், அங்கக சான்றளிப்புத் துறை இயக்குநா் சுரேஷ், சமூக பொறுப்பு திட்டத் தலைவா் அனில் பாலகிருஷ்ணன் உள்பட பலா் பங்கேற்றனா்.