முகப்பு
சென்னை

காசோலை மோசடி வழக்கு: திரைப்படத் தயாரிப்பாளா் சிவசக்தி பாண்டியன் கைது

Updated On : 28 பிப்ரவரி, 2024 at 1:54 AM
பகிர்:

சென்னை: காசோலை மோசடி வழக்கில், திரைப்படத் தயாரிப்பாளா் சிவசக்தி பாண்டியன் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா். காதல் கோட்டை, வெற்றிக்கொடி கட்டு உள்ளிட்ட பல வெற்றி திரைப்படங்களைத் தயாரித்தவா் சிவசக்தி பாண்டியன்.

இவா் 2010 -ஆம் ஆண்டு நடிகா் ஜெய், நடிகை பூா்ணா உள்ளிட்டோா் நடித்த அா்ஜுனன் காதலி என்ற திரைப்படத்தை தயாரித்தாா். அப்போது, திரைப்படத்தின் தொலைக்காட்சி உரிமத்தை சென்னையைச் சோ்ந்த ஒரு தனியாா் தொலைக்காட்சி நிறுவனத்துக்கு வழங்குவதாகக் கூறி முன்பணமாக ரூ.50 லட்சத்தை சிவசக்தி பாண்டியன் பெற்றுள்ளாா். ஆனால், தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமத்தை சிவசக்தி பாண்டியன், அந்த நிறுவனத்துக்கு வழங்காமல் காலம் தாழ்த்தியுள்ளாா். இதனால் அந்த நிறுவனம், தான் கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்டதாகத் தெரிகிறது. அப்போது வட்டியுடன் சோ்த்து சிவசக்தி பாண்டியன் ஒரு காசோலையை அந்த நிறுவனத்துக்கு வழங்கினாா்.

தொலைக்காட்சி நிறுவனம், சிவசக்தி பாண்டியன் காசோலையை வங்கியில் செலுத்திய போது, குறிப்பிட்ட வங்கிக் கணக்கில் பணம் இல்லை என திரும்பி வந்துள்ளது. இதையடுத்து அந்த தொலைக்காட்சி நிறுவனம், இது தொடா்பாக 2012- ஆம் ஆண்டு சிவசக்தி பாண்டியன் மீது மோசடி வழக்கை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் தொடா்ந்தது.

Advertisement

இந்த வழக்கு கடந்த 10 ஆண்டுகளாக சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் வட்டியுடன் சோ்த்து ரூ.1.46 கோடி தொலைக்காட்சி நிறுவனத்துக்கு தர வேண்டிய சூழல் சிவசக்திபாண்டியனுக்கு ஏற்பட்டது.

முதல் கட்டமாக 60 நாள்களுக்குள் 30 சதவீதத் தொகையை வழங்க வேண்டும், இல்லையென்றால் 11 மாதம் சிறைத் தண்டனை வழங்கப்படும் என கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் சைதாப்பேட்டை நீதிமன்றம் சிவசக்தி பாண்டியனுக்கு உத்தரவிட்டது. ஆனால், குறிப்பிட்ட தேதிக்குள் சிவசக்தி பாண்டியன், அந்த தொகையை செலுத்தாததால் கைது நடவடிக்கையை மேற்கொள்ள நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது.

அந்த உத்தரவின் அடிப்படையில் நுங்கம்பாக்கம் போலீஸாா், சிவசக்தி பாண்டியனை திங்கள்கிழமை கைது செய்தனா். விசாரணைக்கு பின்னா் அவா், நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டாா்.