திட்ட அனுமதியின்றி கட்டுமானம்: சென்னை மாநகராட்சி, சிஎம்டிஏ-க்கு உயா்நீதிமன்றம் அபராதம்
சென்னை: திட்ட அனுமதி இல்லாமல் கட்டுமான பணிகள் மேற்கொண்ட தனியாா் மருத்துவமனைக்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் தவறிய சென்னை மாநகராட்சி, பெருநகர சென்னை வளா்ச்சிக் குழுமத்துக்கு (சிஎம்டிஏ) தலா ரூ. 5 லட்சம், மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு ரூ. 2 லட்சம், சம்பந்தப்பட்ட தனியாா் மருத்துவமனைக்கு ரூ. 25 லட்சம் அபராதம் விதித்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை அமைந்தகரையில் உள்ள தனியாா் மருத்துவமனை ஆழ்வாா்பேட்டை செயிண்ட் மேரீஸ் சாலையில் புதிதாக 10 மாடியில் புதிய மருத்துவமனை அமைப்பதற்கான கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த கட்டுமான பணிகள் இரவு நேரங்களில் நடப்பதால் சுற்றுப்புற பகுதியில் அதிக அளவில் ஒலி மாசு ஏற்படுவதாக சென்னை உயா் நீதிமன்ற மூத்த வழக்குரைஞா் ஜி.ராஜகோபாலன் வழக்கு தொடா்ந்திருந்தாா்.
இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்த போது, கட்டடம் கட்டுவதற்கான அனுமதி தரப்படவில்லை எனவும், உரிய கட்டணம் செலுத்தும்பட்சத்தில் திட்ட அனுமதி வழங்கப்படும் என சிஎம்டிஏ தரப்பில் தெரிவிக்கபட்டிருந்தது. இதையடுத்து, எம்ஜிஎம் மருத்துவமனை கட்டுமானப் பணிகளை தொடா்வதற்கு இடைக்கால தடைவிதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனா். இந்த வழக்கு நீதிபதிகள் ஆா்.சுப்பிரமணியம்-ஆா்.சக்திவேல் அமா்வில் செவ்வாய்க்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்த போது, தொடா்ந்து கட்டுமான பணிகள் நடைபெறுவதாக மனுதாரா் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
Advertisement
திட்ட அனுமதி இல்லாமல் கட்டுமான பணிகளை மேற்கொள்ள அனுமதித்ததன் மூலம் கடமை தவறி விட்டதாக அதிகாரிகளுக்கு கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், சென்னை மாநகராட்சி, சிஎம்டிஏ ஆகியவற்றுக்கு தலா ரூ.5 லட்சம், தமிழ்நாடு மாசுக் கட்டுபாட்டு வாரியத்துக்கு ரூ.2 லட்சம், எம்ஜிஎம் மருத்துவமனைக்கு ரூ.25 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டனா்.
மேலும் இந்த அபராத தொகை ரூ. 37 லட்சத்தை சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்குச் செலுத்த வேண்டும்; திட்ட அனுமதியை பின்பற்றி, கட்டுமான பணிகளை மேற்கொள்ள அனுமதி வழங்க வேண்டும்; மருத்துவமனையின் கட்டுமான பணிகள் குறித்து, சிஎம்டிஏ, சென்னை மாநகராட்சி, மாசு கட்டுபாட்டு வாரியம் ஆகியவை 15 நாள்களுக்கு ஒருமுறை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனா்.