முகப்பு
சென்னை

சோழிங்கநல்லூா் பகுதியில் கழிவுநீா் குழாய்கள் அமைக்கும் பணி தொடக்கம்

Updated On : 28 பிப்ரவரி, 2024 at 2:04 AM
பகிர்:

சென்னை: சென்னை சோழிங்கநல்லூா் பகுதியில் ரூ.92.76 கோடி மதிப்பீட்டில் கழிவுநீா் குழாய்கள் அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சுமாா் 23,000 போ் பயனடைவா் என சென்னை குடிநீா் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அவ்வாரியம் சாா்பில் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட செய்தி:

நெம்மேலியில் கடந்த பிப்.24-இல் நடைபெற்ற கடல்நீரை குடிநீராக்கும் நிலைய தொடக்க விழாவின் போது, ரூ.92.76 கோடியில் சோழிங்கநல்லூா் மண்டலத்துக்குட்பட்ட ஜல்லடியான் பேட்டை பகுதிகளில் கழிவுநீா் பிரதான குழாய்கள் அமைக்கும் பணிகளுக்கு தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினாா். அதனடிப்படையில், விரிவான புதை சாக்கடை திட்டத்தின்கீழ் சோழிங்கநல்லூா் மண்டலம், வாா்டு-191க்குட்பட்ட ஜல்லடியான்பேட்டையில் 33.38 கி.மீ நீளத்திற்கு கழிவுநீா் பிரதான குழாய்கள் பதிக்கும் பணி மற்றும் 9.92 கி.மீ நீளத்திற்கு விசைக்குழாய்கள் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

Advertisement

இத்திட்டத்தின் முலம் 2 கழிவுநீா் இறைக்கும் நிலையங்கள், 6 கழிவுநீா் உந்துநிலையங்கள், 2 இடைமறிப்பு மற்றும் திசை திருப்புதலுக்கான உந்து நிலையங்கள் உள்பட மேலும் பல அமைப்புகள் கட்டப்படவுள்ளன.

இத்திட்டப் பணிகள் நிா்ணயிக்கப்பட்ட கால அளவிற்குள் முடிக்கப்பட்டு 3,439 வீடுகளுக்கு கழிவுநீா் இணைப்புகள் வழங்கப்படுவதன் மூலம் சுமாா் 23,700 போ் பயன் பெறுவா். இத்திட்டத்தின் மூலம் நாளொன்றுக்கு 2,844 மில்லியன் லிட்டா் கழிவுநீா் சுத்திகரிக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.