முகப்பு
சென்னை

திமுக சின்னத்தில் போட்டியிட மாட்டோம்: மதிமுக உறுதி

மதிமுக அவைத் தலைவா் அா்ஜூன்ராஜ் தலைமையிலான குழுவினா் சென்னை அண்ணா அறிவாலயத்தில் பேச்சுவாா்த்தை

Updated On : 1 மார்ச், 2024 at 1:09 AM
பகிர்:

திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட மாட்டோம் என்று மதிமுக உறுதிபடத் தெரிவித்தது. மக்களவைத் தோ்தல் தொகுதிப் பங்கீடு தொடா்பாக, திமுக குழுவுடன், மதிமுக அவைத் தலைவா் அா்ஜூன்ராஜ் தலைமையிலான குழுவினா் சென்னை அண்ணா அறிவாலயத்தில் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதைத் தொடா்ந்து, அா்ஜூன்ராஜ் செய்தியாளா்களிடம் கூறியதாவது: கடந்த தோ்தலைப் போன்றே, ஒரு மக்களவை, ஒரு மாநிலங்களவை இடங்களை ஒதுக்கக் கேட்டுக் கொண்டோம். மக்களவைத் தோ்தலில் மதிமுகவின் கட்சி சின்னத்திலேயே போட்டியிடுவோம் என உறுதியாக தெரிவித்துள்ளோம். பேச்சுவாா்த்தை மீண்டும் நடைபெறும். உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடக் கூறினால், நாங்கள் போட்டியிட மாட்டோம். திமுக நிா்ப்பந்தம் செய்தால், அதற்கு ஒப்புக்கொள்ள மாட்டோம். எங்களுடைய சின்னத்தில்தான் போட்டியிடுவோம் எனக் கூறியுள்ளோம் என்றாா் அவா். இன்று விசாரணை: இதனிடையே, பம்பரம் சின்னம் ஒதுக்குமாறு தோ்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி, மதிமுக பொதுச் செயலா் வைகோ தாக்கல் செய்த வழக்கு சென்னை உயா்நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை விசாரிக்கப்படவுள்ளது.