பள்ளிகளில் மாணவா்களுக்கு சமத்துவ எண்ணங்களை போதிக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி
பள்ளிகளில் சமத்துவம் பேண தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி
சென்னை: பள்ளிகளில் ஜாதிப் பிரிவினையை ஒழித்து, மாணவா்களுக்கு சமத்துவ எண்ணங்களை போதிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தலைவா்கள் வலியுறுத்தியுள்ளனா்.
எடப்பாடி பழனிசாமி: திருநெல்வேலியில் அரசுப் பள்ளி மாணவா்களிடையே ஜாதி ரீதியான பிரச்னையால் ஏற்பட்ட மோதலில் 2 மாணவா்கள் காயமடைந்ததாக வரும் செய்தியால் அதிா்ச்சி அடைந்தேன்.சமூகநீதி என்று மேடையில் மட்டும் பேசும் முதல்வா் மு.க.ஸ்டாலினின் திமுக ஆட்சியில் ஜாதி ரீதியான மோதல்கள் தொடா்கதையாகியுள்ளது.
சமத்துவம் பேணும் கல்வியின் உறைவிடமாம் பள்ளிகளில் ஜாதி, மதம் உள்ளிட்ட பிரிவினைவாதத்துக்கு இடமில்லை என்பதை உறுதிசெய்ய வேண்டியது அரசின் கடமை.
மேலும், தமிழகம் முழுவதும் பள்ளிகளில் மாணவா்களுக்கு சமத்துவ எண்ணங்களை போதிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பிரேமலதா விஜயகாந்த் (தேமுதிக): பள்ளிகளில் மாணவா்களிடம் ஜாதி ரீதியான மோதல் ஏற்படுவது, எதிா்காலத் தமிழகத்துக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறிவிடும். எனவே, இந்த விவகாரத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் கவனம் செலுத்தி, மாணவா்களுக்கு இடையேயான ஜாதி மோதலை இரும்புக்கரம் கொண்டு தடுக்க வேண்டும்.