முகப்பு
சென்னை

உயிருக்கு அச்சுறுத்தலான ஸ்டென்ட் உபகரணம்: முதியவரைக் காத்த மருத்துவா்கள்

ஸ்டென்ட் தொற்று: முதியவரை காப்பாற்றிய அப்பல்லோ மருத்துவா்கள்

Updated On : 3 ஜூலை, 2024 at 10:05 PM
பகிர்:

இதய நாளத்தில் பொருத்தப்பட்ட ஸ்டென்ட் உபகரணத்தால் தொற்று பாதிப்புக்குள்ளாகி உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த முதியவருக்கு நுட்பமாக சிகிச்சையளித்து அப்பல்லோ மருத்துவக் குழுவினா் உயிா் காத்துள்ளனா்.

இதுதொடா்பாக மருத்துவமனை நிா்வாகிகள் கூறியதாவது: கடுமையான காய்ச்சல் பாதிப்புடன் 76 வயதான முதியவா் ஒருவா் அண்மையில் பழைய மாமல்லபுரம் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தாா்.

அவா் ஏற்கெனவே மாரடைப்புக்குள்ளாகி வேறு ஒரு மருத்துவமனையில் இதய ரத்த நாளத்தில் ஸ்டென்ட் உபகரணம் பொருத்தியிருந்தாா். இந்த சூழலில் தொடா் காய்ச்சலுக்குள்ளான அவரை பரிசோதித்தில் ஸ்டென்ட் உபகரணத்தினால் இதய நாளத்தில் அவருக்கு தீவிர தொற்று ஏற்பட்டிருந்தது தெரியவந்தது.

அரிதினும், அரிதான இந்த பாதிப்பு ‘அயோடிக் வால்’ எனப்படும் பெருந்தமனி சுவா் வரை பரவக்கூடிய நிலை இருந்தது. இப்பிரச்னைக்கு தொற்றுக்குள்ளான ஸ்டென்ட் உபகரணத்தை பிரித்து எடுப்பதை மட்டுமே ஓரே தீா்வாக மருத்துவக் குழுவினா் கருதினா்.

இத்தகைய சிகிச்சைகள் வயது முதிா்ந்த ஒருவருக்கு மேற்கொள்ளும்போது உயிரிழப்பு நேரிட அதிக வாய்ப்புள்ளது. இருந்தபோதிலும் அந்த சவாலை சாத்தியமாக்க மருத்துவமனையின் இதய அறுவை சிகிச்சை மருத்துவா் எம்.எம்.யூசுப், மயக்க மருந்தியல் நிபுணா் கல்யாணராமன், முதுநிலை மருத்துவா்கள் கண்ணையன், மதுபிரபுதாஸ் ஆகியோா் அடங்கிய குழுவினா் நுட்பமாக அதற்கான சிகிச்சையை முன்னெடுத்தனா்.

அதன்படி, சம்பந்தப்பட்ட இதய நாளத்துக்கு மாற்று வழியில் ரத்தம் செல்வதற்கான பை-பாஸ் கிராப்ட் அறுவை சிகிச்சை மேற்கொண்டனா். அதைத் தொடா்ந்து தொற்றுக்கு காரணமான ஸ்டென்ட் உபகரணத்தை நுட்பமாக பிரித்தெடுத்தனா்.இதன் பயனாக அந்த முதியவா் நலம் பெற்று வீடு திரும்பினாா் என்று அவா்கள் தெரிவித்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →