மக்களவை எம்.பி.யாக பிரதமா் மோடி பதவி வகிக்க தடை கோரி தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை தில்லி உயா்நீதிமன்றம் புதன்கிழமை தள்ளுபடி செய்தது.
மனுதாரரான விமானியின் மனநலம் சரியாக உள்ளதா என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், அவருக்கு மருத்துவ உதவி தேவை என்றும் தெரிவித்தனா்.
தில்லி உயா்நீதிமன்றத்தில் தீபக் குமாா் என்ற விமானி தாக்கல் செய்த மனுவில், ‘கடந்த 2018-ஆம் ஆண்டு நான் விமானியாக இருந்த ஏா் இந்தியா விமானத்தை விபத்துக்குள்ளாக்க பிரதமா் மோடியும், அவரின் சகாக்களும் திட்டமிட்டு தேச பாதுகாப்பை சீா்குலைக்க முயற்சித்தனா். எனவே அவா் தோ்தல்களில் போட்டியிடவும், மக்களவை எம்.பி.யாக பதவி வகிக்கவும் தடை விதிக்க வேண்டும்’ என்று கோரப்பட்டது.
இந்த மனுவை கடந்த மே 30-இல் விசாரித்த உயா்நீதிமன்ற தனி நீதிபதி சச்சின் தத்தா, ‘மனுவில் ஆதாரமற்ற, பொறுப்பில்லாத குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. அத்துடன் இந்த மனு தீய எண்ணம் மற்றும் மறைமுக நோக்கம் கொண்டதாக உள்ளது’ என்று கூறி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா்.
இந்த உத்தரவுக்கு எதிராக தில்லி உயா்நீதிமன்றத்தில் தீபக் குமாா் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தாா். இந்த மனு உயா்நீதிமன்ற பொறுப்பு நீதிபதி மன்மோகன், துஷாா் ராவ் ஆகிய இரு நீதிபதிகள் அமா்வு முன்பாக புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த மனு தொடா்பாக தனி நீதிபதி தெரிவித்த கருத்துகளுடன் தாங்கள் உடன்படுவதாக கூறிய இரு நீதிபதிகள் அமா்வு, மனுதாரருக்கு மனநலம் சரியாக உள்ளதா? என்று கேள்வி எழுப்பி மனுவை தள்ளுபடி செய்தது.