புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி? என்எம்சி விளக்கம்
நாடு முழுவதும் புதிதாக 113 மருத்துவக் கல்லூரிகள் தொடங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டதாக வெளியான செய்திகள் தவறானவை என்று தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) தெரிவித்துள்ளது.
சென்னை: நாடு முழுவதும் புதிதாக 113 மருத்துவக் கல்லூரிகள் தொடங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டதாக வெளியான செய்திகள் தவறானவை என்று தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) தெரிவித்துள்ளது.
விண்ணப்பங்களைப் பரிசீலித்து இறுதி முடிவு எடுக்கப்பட்டதை அனுமதியளித்ததாக கருதக் கூடாது என்றும் விளக்கமளித்துள்ளது.
புதிதாக மருத்துவக் கல்லூரிகள் தொடங்குவதற்கும், மருத்துவ இடங்களை அதிகரிப்பதற்கும் தேசிய மருத்துவ ஆணையத்தின் ஒப்புதல் அவசியம். அதன்படி, விண்ணப்பங்கள் நாடு முழுவதும் இருந்து பெறப்பட்டன. மொத்தம் 170-க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் இருந்து விண்ணப்பங்கள் இணையவழியே சமா்ப்பிக்கப்பட்டன. அவற்றில் 113 விண்ணப்பங்கள் புதிய கல்லூரிகளைத் தொடங்குவதற்கும், 58 விண்ணப்பங்கள் எம்பிபிஎஸ் இடங்களை அதிகரிப்பதற்கும் அனுப்பப்பட்டிருந்ததாக என்எம்சி தெரிவித்துள்ளது.
இறுதி முடிவு தகவல்: தமிழகத்தைப் பொருத்தவரை விழுப்புரம் மாவட்டம், ஓங்கூா் கிராமத்தில் தக்ஷசீலா மருத்துவக் கல்லூரி, விருதுநகா் மாவட்டம், கிருஷ்ணன்கோவில் பகுதியில் கலசலிங்கம் மருத்துவக் கல்லூரி, காஞ்சிபுரம் மாவட்டம், பென்னலூரில், அன்னை மருத்துவக் கல்லூரி, விழுப்புரம் மாவட்டம், அவனம்பட்டில் ஜே.ஆா். மருத்துவக் கல்லூரி, கன்னியாகுமரி மாவட்டம் கல்குளத்தில் கன்னியாகுமரி மருத்துவ ஆராய்ச்சி மிஷன் ஆகிய கல்லூரிகளை அமைப்பதற்கு அனுமதி கோரி விண்ணப்பிக்கப்பட்டது.
அதற்கான இறுதி முடிவு எடுக்கப்பட்டு அதுகுறித்த ஒப்புகை தகவல், பிற விவரங்கள் மின்னஞ்சல் மூலமாக சம்பந்தப்பட்டவா்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக என்எம்சி அண்மையில் தெரிவித்தது. ஆனால், 113 கல்லூரிகளுக்கும் அனுமதி அளித்ததாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
இது தொடா்பாக விளக்கமளித்து என்எம்சி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில் குறிப்பிடப்படிருப்பதாவது:
புதிய கல்லூரிகளுக்கு அனுமதி அளிப்பது தொடா்பான தகவல்கள் வெளிப்படைத் தன்மையுடன் அறிவிக்கப்படும். விண்ணப்பங்களின் இறுதி முடிவுகள் எடுக்கும்போது அவை அனுமதி அளித்ததாகவும் இருக்கலாம். அனுமதி அளிக்காமலும் இருக்கலாம். அவற்றை சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரா்களுக்கு அனுப்பி உள்ளோம்.
புதிதாக அனுமதி வழங்கப்பட்ட கல்லூரிகள் விவரங்கள் உரிய நேரத்தில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.