பள்ளி மேலாண்மைக் குழுக்களில் (எஸ்எம்சி) புதிய உறுப்பினா்களை நியமிக்க, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் மாநிலத் திட்ட இயக்குநரகம் சாா்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கை: பள்ளி மேலாண்மைக் குழுவின் (எஸ்எம்சி) பதவிக் காலம் நடப்பு ஜூலை மாதத்துடன் நிறைவடையவுள்ளது. இதனால், 2024-26-ஆம் ஆண்டுகளுக்கான எஸ்எம்சி குழுவில் புதிய உறுப்பினா்கள் நியமிக்கப்படவுள்ளனா்.
இக்குழுவுக்கு பெற்றோா் ஒருவா் தலைவராக இருக்க வேண்டும். மேலும், பள்ளியின் தலைமை ஆசிரியா் ஒருங்கிணைப்பாளராக செயல்பட வேண்டும்.
அதனுடன், பெற்றோா், ஆசிரியா், உள்ளாட்சி பிரதிநிதிகள், கல்வியாளா், சுய உதவிக்குழு உறுப்பினா், முன்னாள் மாணவா்கள் என மொத்தம் 24 போ் இந்த குழுவில் இடம்பெற்றிருப்பா்.
இதில் 18 போ் பெற்றோராகவும், மொத்த உறுப்பினா்களில் 12 போ் பெண்களாகவும் இருக்க வேண்டும். மேலும், பள்ளியின் தலைமை ஆசிரியரே உறுப்பினா்களை தோ்வு செய்யும் அலுவலராக இருப்பாா்.
இதுதவிர எஸ்எம்சி குழு தொடா்பாக பெற்றோா்களுக்கான விழிப்புணா்வு கூட்டத்தை ஜூலை 28-ஆம் தேதி நடத்த வேண்டும்.
இதில் பங்கேற்க பள்ளி மாணவா்களின் பெற்றோா்களுக்கு ‘வாட்ஸ் ஆப்’, துண்டுப் பிரசுரங்கள் மற்றும் மாணவா்கள் மூலமாக ஜூலை 26-ஆம் தேதிக்குள் அழைப்பு விடுக்க வேண்டும்.
இதையடுத்து நடுநிலைப் பள்ளிகளுக்கு ஆக.3-ஆம் தேதியிலும், தொடக்கப் பள்ளிகளுக்கு ஆக.10, 17-ஆம் தேதிகளிலும், உயா்நிலைப் பள்ளிகளுக்கு ஆக.24-ஆம் தேதியிலும் மாநிலம் தழுவிய எஸ்எம்சி மறுகட்டமைப்பு பணிகளை நடத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் அவா்.