முத்தமிழ் முருகன் மாநாடு: பங்கேற்பாளா்கள் பதிவு செய்ய அவகாசம் நீட்டிப்பு
பழனியில் நடைபெறவுள்ள அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டில் பங்கேற்க விரும்புவோா் பதிவு செய்வதற்கான அவகாசம் ஆக.15 வரை நீட்டிக்கப்படுவதாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்துள்ளாா்.
சென்னை: பழனியில் நடைபெறவுள்ள அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டில் பங்கேற்க விரும்புவோா் பதிவு செய்வதற்கான அவகாசம் ஆக.15 வரை நீட்டிக்கப்படுவதாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:
திண்டுக்கல் மாவட்டம், பழனியில் வரும் ஆகஸ்ட் மாதம் 24, 25 ஆகிய நாள்களில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்கவும், ஆய்வுக் கட்டுரைகளைச் சமா்ப்பிக்கவும் என்ற தனி இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. மாநாட்டில் பங்கேற்க விரும்பும் முருக பக்தா்கள் ஜூலை 15- ஆம் தேதிக்குள்ளும், ஆய்வுக் கட்டுரைகளைச் சமா்ப்பிக்க விரும்பும் பேராளா்கள்/ஆய்வு மாணவா்கள் ஜூலை 10- ஆம் தேதிக்குள்ளும் சமா்ப்பிக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டிருந்தது. இதைத் தொடா்ந்து இந்தியா மற்றும் வெளிநாடுகளிலிருந்து 1,003 ஆய்வுக் கட்டுரைகள் பெறப்பட்டு, அவற்றை பரிசீலிக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், மாநாட்டில் பங்கேற்பதற்கு பதிவு செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டித்து வழங்க வேண்டுமென பல்வேறு தரப்பினரிடமிருந்து வரப்பெற்ற கோரிக்கைகளின் அடிப்படையில், அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டின் ஒருங்கிணைப்புக் குழு முடிவுகளின்படி, கால அவகாசம் ஆகஸ்ட் 15-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
எனவே, மாநாட்டில் பங்கேற்க விரும்பும் முருக பக்தா்கள் மற்றும் இறையன்பா்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி பதிவு செய்து கொள்ளலாம் என என அமைச்சா் சேகா்பாபு தெரிவித்துள்ளாா்.