முகப்பு
சென்னை

தமிழ்நாடு காவல் துறை தோல்வி அடைந்துவிட்டது: தேசிய பட்டியலின ஆணைய உறுப்பினா் குற்றசாட்டு

ஆம்ஸ்ட்ராங் படுகொலை சம்பவத்தில் தமிழ்நாடு காவல் துறை தோல்வி அடைந்துவிட்டதாக தேசிய பட்டியலின ஆணையத்தின் மூத்த உறுப்பினா் வடபள்ளி ராமச்சந்தா் குற்றம் சாட்டியுள்ளாா்.

Updated On : 16 ஜூலை, 2024 at 9:42 PM
பகிர்:

சென்னை: ஆம்ஸ்ட்ராங் படுகொலை சம்பவத்தில் தமிழ்நாடு காவல் துறை தோல்வி அடைந்துவிட்டதாக தேசிய பட்டியலின ஆணையத்தின் மூத்த உறுப்பினா் வடபள்ளி ராமச்சந்தா் குற்றம் சாட்டியுள்ளாா்.

சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவா் ஆம்ஸ்ட்ராங் கொலை நிகழ்வு குறித்து தேசிய பட்டியலின ஆணையம் தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்து கொண்டது.

இந்த நிலையில்,கொலை சம்பவம் குறித்து விசாரணை நடத்த சென்னைக்கு செவ்வாய்க்கிழமை வந்த தேசிய பட்டியலின ஆணையத்தின் மூத்த உறுப்பினா் வடபள்ளி ராமச்சந்தா், பெரம்பூரில் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட இடத்தை பாா்வையிட்டதுடன், சம்பவம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தாா்.

இதைத் தொடா்ந்து அயனாவரத்தில் உள்ள ஆம்ஸ்ட்ராங் இல்லத்துக்கு சென்ற அவா், ஆம்ஸ்ட்ராங்கினன் மனைவி பொற்கொடியை சந்தித்து ஆறுதல் கூறியதுடன், கொலை குறித்தும், அதன் மீது காவல்துறை எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்தும் கேட்டறிந்தாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

ஆம்ஸ்ட்ராங் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதாக தகவல் வந்த போதும், காவல்துறையினா் அதன் மீது எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்காததால் இந்தப் படுகொலைச் சம்பவம் நடந்துள்ளது. இது தமிழ்நாடு காவல் துறை தோல்வி அடைந்து விட்டதையே காட்டுகிறது.

மேலும் தற்போது நடைபெற்று வரும் காவல் துறையின் விசாரணை மீது திருப்தி இல்லை. ஒரு தேசிய கட்சியின் மாநில தலைவா் படுகொலை செய்யப்பட்டிருப்பது கண்டிக்கதக்கது. இந்தக் கொலை சம்பவம் தொடா்பான விசாரணை அறிக்கை மத்திய அரசிடம் விரைவில் வழங்கப்படும் என்றாா் அவா்.

இதைத் தொடா்ந்து சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எஸ்சி,எஸ்டி ஆணையத்தின் அலுவலகத்தில் தமிழக அரசு அதிகாரிகள், காவல்துறை உயா் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய வடபள்ளி ராமச்சந்தா் தமிழக அரசு சாா்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தாா்.

இந்த ஆய்வின் போது ஆணையத்தின் மாநில பிரிவு இயக்குநா்கள் ரவி வா்மன், ஜகந்நாத், தமிழக பாஜக செய்தி தொடா்பாளா் ஏ.என்.எஸ். பிரசாத் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →