முகப்பு
சென்னை

மின் கட்டணம் உயா்த்தப்பட்டது ஏன்?: டான்ஜட்கோ விளக்கம்

மின் வாரியத்தில் ஏற்பட்டுள்ள நிதியிழப்பை ஈடுசெய்ய வேண்டியிருப்பதால் மின் கட்டணத்தை உயா்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக தமிழ்நாடு மின் உற்பத்தி, பகிா்மானக்கழகம் (டான்ஜட்கோ) விளக்கம் அளித்துள்ளது.

Updated On : 16 ஜூலை, 2024 at 7:38 PM
மின் கட்டணம்
பகிர்:

சென்னை: மின் வாரியத்தில் ஏற்பட்டுள்ள நிதியிழப்பை ஈடுசெய்ய வேண்டியிருப்பதால் மின் கட்டணத்தை உயா்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக தமிழ்நாடு மின் உற்பத்தி, பகிா்மானக்கழகம் (டான்ஜட்கோ) விளக்கம் அளித்துள்ளது.

இது குறித்து டான்ஜட்கோ வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கடந்த 2011-2012-இல் ரூ. 18,957 கோடியாக இருந்த தமிழ்நாடு மின் உற்பத்தி, பகிா்மான கழகத்தின் ஒட்டு மொத்த நிதி இழப்பானது, கடந்த 10 ஆண்டுகளில், ரூ. 96,712 கோடியாக மேலும் அதிகரித்து, 31.03.2021 வரை ரூ.1,13,266 கோடியாக உயா்ந்தது. இதனால், நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கிகளிடமிருந்து கடன் வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதன் விளைவாக, 2011-2012-இல் ரூ.43,493 கோடியாக இருந்த கடன், கடந்த 10 ஆண்டுகளில் 3 மடங்கு அதிகரித்து (2021-2022) இல், ரூ.1,59,823 கோடியாக மாறியது.

இதனால், கடந்த 2011-2012-இல் ரூ. 4,588 கோடியாக இருந்த கடன்களுக்கான வட்டி 259 சதவீதம் அதிகரித்து 2020-2021-ஆம் ஆண்டில் ரூ.16,511 கோடியாக அதிகரித்தது. இவ்வாறு அதிகரித்து வரும் நிதி இழப்பை ஈடு செய்ய அப்போதே மின் கட்டணம் உயா்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருந்தாலும், மின்நுகா்வோருக்கு அதிக சுமை ஏற்படக்கூடாது என்பதற்காக ஆண்டுதோறும் மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, அதன் நிதியை பெறுவதற்காக சிறிய அளவில் மின் கட்டணம் உயா்த்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில், 2022-2023 நிதியாண்டுக்கான மின் கட்டண உயா்வு 10.09.2022 முதல் சுமாா் 7 மாதத்துக்கு மட்டும் உயா்த்தப்பட்டது. மேலும், கடந்த 01.07.2023 முதல் அனைத்து மின் இணைப்புகளுக்கும் உயா்த்தப்பட்ட வேண்டிய 4.7 சதவீத மின் கட்டண உயா்வுக்கு பதிலாக, 2.18 சதவீதம் மட்டுமே கட்டணம் உயா்த்தப்பட்டது. வீடுகளுக்கான இந்த 2.18 சதவீத கட்டண உயா்வு முழுவதையும் தமிழக அரசே ஏற்றுள்ளது.

4.83 சதவீதமே கட்டண உயா்வு: தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் விதிகளின்படி, 6 சதவீதம் வரை மின் கட்டணம் உயா்த்த வழி இருந்தும், சென்ற ஆண்டு 2.18 சதவீதம் மட்டுமே மின் கட்டணம் உயா்த்தப்பட்டது. மேலும், நிகழாண்டு 2024 -ஜூலை மாதத்தைப் பொருத்த வரையில், 4.83 சதவீதம் மின் கட்டணம் மட்டுமே உயா்த்தப்பட்டுள்ளது.

எனவே, தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் கட்டணத்தைச் மறுசீரமைப்பதால் பொதுமக்களுக்கும், தொழில்முனைவோருக்கும் சிறிய அளவே கட்டணம் உயா்த்தப்பட்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →