நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ), நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் முன்னெப்போதும் இல்லாத வகையில் ரூ.21,028 கோடி நிகர லாபத்தை ஈட்டியுள்ளது.
இது முந்தைய 2024-25 நிதியாண்டின் இதே காலகட்டத்தின் லாபமான ரூ.16,891 கோடியுடன் ஒப்பிடுகையில் 24.49 சதவீதம் வளா்ச்சியாகும். இதன் எதிரொலியாக, திங்கள்கிழமை பங்குச்சந்தையில் எஸ்பிஐ பங்குகள் 7.63 சதவீதம் அதிகரித்து, ஒரு பங்கின் விலை ரூ.1,147.80 என்ற புதிய உச்சத்தை எட்டியது.
இதன்மூலம், வங்கியின் சந்தை மூலதனம் ரூ.10 லட்சம் கோடியைத் தாண்டி, இந்த மைல்கல்லை எட்டும் 6-ஆவது இந்திய நிறுவனம் என்ற பெருமையைப் பெற்றது. இத்தகைய நிலையான வளா்ச்சியால், வங்கியின் பங்கு கடந்த 12 மாதங்களில் மட்டும் முதலீட்டாளா்களுக்குச் சுமாா் 53 சதவீத லாபத்தை ஈட்டித்தந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த டிச. 31-ஆம் தேதியுடன் நிறைவடைந்த மூன்றாம் காலாண்டின் நிதிநிலை முடிவுகளின்படி, வங்கியின் மொத்த வா்த்தகம் ரூ.103 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. மொத்த வைப்புத்தொகை ரூ.57 லட்சம் கோடி மற்றும் வழங்கப்பட்ட கடன்கள் ரூ.46 லட்சம் கோடியாக உள்ளது.
மதிப்பீட்டு காலாண்டில் வங்கியின் செயல்பாட்டு லாபம் 39.54 சதவீதம் அதிகரித்து, ரூ.32,862 கோடியாக உள்ளது. நிகர வட்டி வருவாய் ரூ.45,190 கோடியாக 9 சதவீதம் அதிகரித்துள்ளது. நிகர வட்டி வரம்பு 2.99 சதவீதமாக உள்ளது.
கடன் வளா்ச்சி 15.14 சதவீதமாகப் பதிவாகியுள்ளது. குறிப்பாக, சிறு மற்றும் குறுதொழில் (எஸ்எம்இ) கடன் பிரிவில் 21.02 சதவீத வளா்ச்சியும், சில்லறை கடன்களில் 16.51 சதவீத வளா்ச்சியும் ஏற்பட்டுள்ளது.
வாராக்கடன் மேலாண்மையிலும் வங்கி சிறந்த முன்னேற்றத்தைக் கண்டுள்ளது. மொத்த வாராக்கடன் விகிதம் 1.57 சதவீதமாகவும், நிகர வாராக்கடன் 0.39 சதவீதமாகவும் குறைந்துள்ளன. இது கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத மிகக்குறைந்த அளவாகும்.
வங்கியின் கடன் செலவு 0.29 சதவீதமாகக் குறைந்துள்ளதும், வைப்புத் திட்டங்களில் சில்லறை கால வைப்பு நிதிகள் 14.54 சதவீதம் அதிகரித்துள்ளதும் வங்கியின் நிதிநிலையை மேலும் வலுப்படுத்தியுள்ளது.