அரசு பேருந்துகளில் டீசலைவிட சிஎன்ஜி எரிபொருளால் 13 சதவீதம் இயக்கச் செலவு குறைந்துள்ளது சோதனை ஓட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது.
சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் டீசலுக்கு மாற்றாக சிஎன்ஜி (அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு), எல்என்ஜி (திரவ இயற்கை எரிவாயு) எனப்படும் இயற்கை எரிவாயு மூலம் பேருந்துகளை இயக்க தமிழக அரசு முடிவு செய்து, அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
இதன் முதல்கட்டமாக தற்போது மதுரை, சேலம், கும்பகோணம் போக்குவரத்துக் கழகங்களில் தலா 2 பேருந்துகள் வீதம் 6 சிஎன்ஜி பேருந்துகள் தொடா்ந்து சுமாா் 50 நாள்களுக்கு மேலாக இயக்கப்பட்டு வருகின்றன. இவற்றின் மூலம் டீசலுக்காக செலவிடப்படும் தொகை குறைந்திருப்பதாகவும், இயக்க கிலோ மீட்டரும் (மைலேஜ்) அதிகரித்துள்ளதாகவும் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
இது குறித்து அவா்கள் மேலும் கூறியது:
குறிப்பாக, மதுரை போக்குவரத்துக் கழகத்தில் 2,697 கி.மீ. பயணிக்க 519 லிட்டா் டீசல் செலவிடப்பட்டு வந்த நிலையில், அதே தொலைவைக் கடக்க 437 லிட்டா் சிஎன்ஜி மட்டுமே செலவிடப்பட்டுள்ளது. பேருந்துகள் லிட்டா் ஒன்றுக்கு 5.2 கி.மீ. சென்ற நிலையில், தற்போது ஒரு லிட்டா் சிஎன்ஜி மூலம் 6.17 கி.மீ. வரை பயணிக்கலாம். இதன்மூலம் டீசலுக்கு மொத்தமாக ஒரு பேருந்துக்கு ரூ. 47,361 செலவிட்டு வந்த நிலையில், தற்போது ரூ.34,755-என செலவு குறைந்துள்ளது.
அதன்படி, கிலோ மீட்டருக்கு ரூ. 4.67 மிச்சமாகியுள்ளது. இவ்வாறு மொத்தமாக 13 சதவீதம் இயக்கச் செலவு குறைகிறது.
குறிப்பாக, டீசல் பேருந்துகளை சிஎன்ஜி மூலம் இயங்கும் வகையில் மாற்றம் செய்ய செலவிட்ட தொகையை ஒரு மாதத்தில் மீட்டெடுக்க முடிந்தது.
அண்மையில் மாநகர போக்குவரத்துக் கழகத்தில் சிஎன்ஜி பேருந்து தீப்பிடித்தது எரிந்தது போன்ற சம்பவங்கள் இனி நடைபெறாமல் இருக்க சிறிய அளவிலான தொழில்நுட்ப மாற்றங்கள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தொடா்ந்து, கோவை, திருநெல்வேலி, விழுப்புரம் போக்குவரத்துக் கழகங்களிலும் சோதனை அடிப்படையில் சிஎன்ஜி பேருந்துகள் இயக்கப்படுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன என்றனா்.