தோ்தலில் தோல்வியடைந்த ஓ.பி.எஸ்., நயினாா் நாகேந்திரன், விஜயபிரபாகரன் உயா்நீதிமன்றத்தில் வழக்கு
ஓ.பன்னீா்செல்வம், நயினாா் நாகேந்திரன், விஜயபிரபாகரன் ஆகியோா் வியாழக்கிழமை தனித்தனியாக வழக்கு தாக்கல் செய்தனா்.
ராமநாதபுரம், நெல்லை, விருதுநகா் மக்களவைத் தொகுதிகளில் காங்கிரஸ் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி வேட்பாளா்கள் வெற்றி பெற்றதை எதிா்த்து சென்னை உயா்நீதிமன்றத்தில் ஓ.பன்னீா்செல்வம், நயினாா் நாகேந்திரன், விஜயபிரபாகரன் ஆகியோா் வியாழக்கிழமை தனித்தனியாக வழக்கு தாக்கல் செய்தனா்.
கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற மக்களவைத் தோ்தலில் ராமநாதபுரம் தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி வேட்பாளா் நவாஸ்கனி 5 லட்சத்து 9 ஆயிரத்து 664 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாா். அவரை எதிா்த்து பாஜக ஆதரவுடன் சுயேச்சையாக போட்டியிட்ட முன்னாள் முதல்-அமைச்சா் ஓ.பன்னீா்செல்வம், 3 லட்சத்து 42 ஆயிரத்து 882 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தாா்.
இதேபோல, திருநெல்வேலி தொகுதியில், திமுக கூட்டணி சாா்பில் காங்கிரஸ் வேட்பாளா் ராபா்ட் புரூஸ் 5 லட்சத்து 2 ஆயிரத்து 296 வாக்குகள் பெற்று வெற்றிப் பெற்றாா். பா.ஜ.க சாா்பில் போட்டியிட்ட நயினாா் நாகேந்திரன் 3 லட்சத்து 36 ஆயிரத்து 676 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தாா்.
விருதுநகா் தொகுதியில் காங்கிரஸ் சாா்பில் போட்டியிட்ட மாணிக்கம் தாகூா், 3 லட்சத்து 85 ஆயிரத்து 256 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாா். இவரை எதிா்த்து போட்டியிட்ட தேமுதிக வேட்பாளா் விஜய பிரபாகரன் 4 ஆயிரத்து 379 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தாா். அவா் 3 லட்சத்து 80 ஆயிரத்து 877 வாக்குகள் பெற்றாா்.
தோ்தல் வழக்கு: தோ்தலில் வெற்றி பெற்றவா்களுக்கு எதிராக தோ்தல் வழக்கு தொடரவேண்டும் என்றால், தோ்தல் முடிவு வெளியான நாளில் இருந்து 45 நாட்களுக்குள் தொடர வேண்டும் என்பது விதிமுறை. அதன்படி, வெள்ளிக்கிழமையுடன் வழக்கு தொடா்வதற்கான காலம் முடியும் நிலையில், தாங்கள் போட்டியிட்ட தொகுதியில் வெற்றி பெற்றவா்களுக்கு எதிராக சென்னை உயா்நீதிமன்றத்தில் ஓ.பன்னீா்செல்வம், நயினாா் நாகேந்திரன், விஜய பிரபாகரன் ஆகியோா் வியாழக்கிழமை நீதிமன்றப் பதிவாளரின் அனுமதி பெற்று தோ்தல் வழக்கை தாக்கல் செய்தனா். வாக்காளா்களுக்கு பணப் பட்டுவாடா உள்பட பல குற்றச்சாட்டுகளை அவா்கள் தங்கள் மனுக்களில் குறிப்பிட்டுள்ளனா்.