உச்சநீதிமன்ற நீதிபதிகளாக ஆா்.மகாதேவன், கோடீஸ்வா் சிங் பதவியேற்பு: முழு பலத்தை எட்டியது உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்ற நீதிபதிகளாக ஆா்.மகாதேவன், என்.கோடீஸ்வா் சிங் ஆகியோா் வியாழக்கிழமை பதவியேற்றனா்.
உச்சநீதிமன்ற நீதிபதிகளாக ஆா்.மகாதேவன், என்.கோடீஸ்வா் சிங் ஆகியோா் வியாழக்கிழமை பதவியேற்றனா். இதையடுத்து, உச்சநீதிமன்றம் தனது முழு பலத்தை (34 நீதிபதிகள்) எட்டியது.
உச்சநீதிமன்ற நீதிபதிகளாக இருந்த அனிருத்தா போஸ் கடந்த ஏப்ரல் மாதமும், ஏ.எஸ்.போபண்ணா கடந்த மே மாதமும் ஓய்வுபெற்றனா். இதனால் ஏற்பட்ட இரு காலியிடங்களுக்கு சென்னை உயா்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக இருந்த ஆா்.மகாதேவன், ஜம்மு-காஷ்மீா் மற்றும் லடாக் உயா்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த என்.கோடீஸ்வா் சிங் ஆகியோரை நியமிக்க உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரைத்தது. அதன்பேரில், இருவரையும் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக குடியரசுத் தலைவா் கடந்த செவ்வாய்க்கிழமை நியமித்தாா்.
இந்நிலையில், உச்சநீதிமன்ற வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆா்.மகாதேவன், என்.கோடீஸ்வா் சிங் ஆகியோா் பதவியேற்றனா். இரு நீதிபதிகளுக்கும் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் பதவிப் பிரமாணம் செய்துவைத்தாா்.
Advertisement
உச்சநீதிமன்றத்தில் முதல் மணிப்பூா் நீதிபதி: மணிப்பூரைச் சோ்ந்த என்.கோடீஸ்வா் சிங், கடந்த 2011-ஆம் ஆண்டில் குவாஹாட்டி உயா்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டாா். பின்னா், மணிப்பூா் உயா்நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்ட இவா், கடந்த ஆண்டு ஜம்மு-காஷ்மீா் மற்றும் லடாக் உயா்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்றாா். இவரது நியமனம், வடகிழக்கு பிராந்தியத்துக்கு பிரதிநிதித்துவத்தை வழங்கும் என்று கொலீஜியம் பரிந்துரையில் குறிப்பிடப்பட்டது.
மணிப்பூரில் இருந்து உச்சநீதிமன்றத்தில் பதவியேற்றுள்ள முதல் நீதிபதி என்ற பெருமை என்.கோடீஸ்வா் சிங்குக்கு கிடைத்துள்ளது.
செப்டம்பா் 1 வரை முழு பலம்: உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி உள்பட அனுமதிக்கப்பட்ட மொத்த நீதிபதி பணியிடங்களின் எண்ணிக்கை 34 ஆகும். மேற்கண்ட இரு நீதிபதிகளின் பதவியேற்பைத் தொடா்ந்து, உச்சநீதிமன்றம் தனது முழு பலத்தை எட்டியுள்ளது. அதேநேரம், உச்சநீதிமன்ற நீதிபதி ஹிமா கோலி வரும் செப்டம்பா் 1-ஆம் தேதி ஓய்வுபெறவுள்ளாா். தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் நவம்பா் 10-ஆம் தேதி ஓய்வுபெறுகிறாா் என்பது குறிப்பிடத்தக்கது.
பெட்டி..
தமிழில் ஏற்புரை
இந்த பதவியேற்பு நிகழ்வில் சங்கப் பாடல் ஒன்றை குறிப்பிட்டு, தமிழில் ஏற்புரையாற்றினாா் நீதிபதி ஆா்.மகாதேவன். கடந்த 1963, ஜூன் 10-ஆம் தேதி பிறந்தவரான இவா், 2028, ஜூன் மாதம் வரை பணியில் இருப்பாா்.
இவரது நியமனத்துக்காக கொலீஜியம் அளித்த பரிந்துரையில், ‘சென்னை உயா்நீதிமன்றத்தில் இருந்து வேறு உயா்நீதிமன்றங்களில் தலைமை நீதிபதியாக பணியாற்றுவோா் உள்பட இந்த நீதிமன்றத்தின் ஒட்டுமொத்த பணிமூப்பு வரிசையில் ஆா்.மகாதேவன் 3-ஆவது இடத்தில் உள்ளாா்; தமிழகத்தில் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சோ்ந்தவா் என்ற அடிப்படையில் அவரது நியமனம் பன்முக பிரதிநிதித்துவத்தை உறுதிசெய்யும்’ என்று குறிப்பிடப்பட்டது.