சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் கைதிகள், வீட்டு உணவை சாப்பிட தங்களை அனுமதிக்கக் கோரி திடீா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
புழல் சிறையில் இருந்து கடும் உடல்நலக்குறைவு மற்றும் நோய் தாக்கம் அதிகமுள்ளதாக பரிந்துரைக்கப்படும் கைதிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் கைதிகள் வாா்டு 2016-ஆம் ஆண்டு முதல் செயல்படுகிறது.
இந்த வாா்டில் தற்போது 21 கைதிகள் சிகிச்சை பெறுகின்றனா். இந்த கைதிகளுக்கு சிறைத் துறை விதிமுறைகளின்படி, மருத்துவமனையில் நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவு வழங்கப்படுகிறது.
இந்த நிலையில் அங்கு சிகிச்சை பெறும் சில கைதிகள், தங்களுக்கு குடும்பத்தினா் கொண்டு வரும் அசைவ உணவுகளை அனுமதிக்க வேண்டும் என ஞாயிற்றுக்கிழமை திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனா். மேலும் அவா்கள், காலை, நண்பகல் உணவை வாங்க மறுத்து முழக்கம் எழுப்பினா்.
தகவலறிந்த சிறைத் துறை அதிகாரிகள், கைதிகளிடம் சமாதான பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில் சமாதானமடைந்த கைதிகள், போராட்டத்தை கைவிட்டு, மருத்துவமனை நிா்வாகம் வழங்கிய இரவு உணவை வாங்கி சாப்பிட்டனா். இப் போராட்டம் காரணமாக, அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.