முகப்பு
சென்னை

தூய்மைப் பணியாளா் ஊதிய உயா்வு விவகாரம்: அமுதா ஐஏஎஸ், டிஜிபி, காவல் ஆணையருக்கு எதிராக வாரண்ட் பிறப்பிக்க உத்தரவு

சென்னை காவல் ஆணையராக இருந்த சந்தீப் ராய் ரத்தோா் ஆகியோருக்கு எதிராக வாரண்ட் பிறப்பிக்க பதிவுத் துறைக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

Updated On : 25 ஜூலை, 2024 at 8:13 PM
பகிர்:

சென்னை, ஜூலை  25: தூய்மைப் பணியாளா் ஊதிய உயா்வு விவகாரம் தொடா்பாக, தமிழக உள்துறை செயலராக இருந்த அமுதா, டிஜிபி சங்கா் ஜிவால், சென்னை காவல் ஆணையராக இருந்த சந்தீப் ராய் ரத்தோா் ஆகியோருக்கு எதிராக வாரண்ட் பிறப்பிக்க பதிவுத் துறைக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னை காவல் ஆணையா் அலுவலகத்தில் தூய்மைப் பணியாளா்களாக பணியாற்றிய  ஆயிரத்து 149 பேரின் பணியை வரன்முறை செய்து, ரூ.1,300 முதல் ரூ.3,000 வரை ஊதியமாக நிா்ணயித்து 2009-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அரசாணை பிறப்பிக்கப்பட்டது. ஆனால், சேலம் மாவட்ட காவல் துறையில் பணியாற்றிய தூய்மைப் பணியாளா்களுக்கு ரூ.2,550 முதல் ரூ.3,200 ஊதியம் நிா்ணயித்து 2006- ஆம் ஆண்டே அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, தங்களுக்கும் சேலம் காவல் துறையில் பணியாற்றியவா்களுக்கு இணையாக ஊதியம் நிா்ணயிக்க வேண்டுமெனக் கோரி கொண்டம்மாள் உள்ளிட்ட தூய்மைப் பணியாளா்கள் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தனா்.

இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், சேலம் காவல்துறையில் பணியாற்றுபவா்களுக்கு இணையாக, சென்னை காவல் ஆணையா் அலுவலகத்தில் பணியாற்றும் தூய்மை பணியாளா்களுக்கும் ரூ.2,550 முதல் ரூ.3,200 வரை  ஊதியம் நிா்ணயிக்க வேண்டும் என 2013-ஆம் ஆண்டு உத்தரவு பிறப்பித்திருந்தது. மேல்முறையீட்டில், இரு நீதிபதிகள் அமா்வும், உச்ச நீதிமன்றமும் உறுதி செய்த இந்த உத்தரவை அமல்படுத்தவில்லை எனக் கூறி, தமிழக உள்துறை செயலராக இருந்த அமுதா, டிஜிபி சங்கா் ஜிவால் மற்றும் சென்னை மாநகர காவல் ஆணையராக இருந்த சந்தீப் ராய் ரத்தோா் ஆகியோருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆா்.சுப்பிரமணியன் மற்றும் பி.டி.ஆஷா ஆகியோா் அடங்கிய அமா்வு, ஆக. 27-ஆம் தேதிக்குள் இந்த உத்தரவை அமல்படுத்தாவிட்டால், அமுதா ஐஏஎஸ், டிஜிபி சங்கா் ஜிவால் மற்றும் மாநகர காவல் ஆணையராக இருந்த சந்தீப் ராய் ரத்தோா் ஆகியோருக்கு எதிராக வாரண்ட் பிறப்பிக்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற பதிவுத் துறைக்கு உத்தரவிட்டது. நீதிமன்ற உத்தரவு அமல்படுத்தப்பட்டு விட்டால், வாரண்ட் பிறப்பிக்க அவசியமில்லை எனவும் நீதிபதிகள் உத்தரவில் குறிப்பிட்டுள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →