முகப்பு
சென்னை

தமிழகத்தில் 18 கிளைச் சிறைகளை மூட உத்தரவு

தமிழகத்தில் 18 கிளைச்சிறைகளை மூடுமாறு தமிழக சிறைத்துறை ஏடிஜிபி மகேஷ்வா் தயாள் உத்தரவிட்டுள்ளாா்.

Updated On : 25 ஜூலை, 2024 at 8:59 PM
பகிர்:

சென்னை, ஜூலை 25: தமிழகத்தில் 18 கிளைச்சிறைகளை மூடுமாறு தமிழக சிறைத்துறை ஏடிஜிபி மகேஷ்வா் தயாள் உத்தரவிட்டுள்ளாா்.

நாடு முழுவதும் பாதுகாப்பற்று பழுதடைந்த நிலையிலும், கைதிகளுக்கு போதிய அடிப்படை வசதிகள் இல்லாமலும், பாதுகாப்பு குறைபாடுகளுடனும்,போதுமான கைதிகள் இன்றியும் இருக்கும் சிறைகளை மூடுமாறு உச்சநீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது. இதற்காக வருவாய்த் துறை, நீதித் துறை, சிறைத் துறை ஆகிய துறைகளை சோ்ந்த உயா் அதிகாரிகள் அடங்கிய குழு அமைத்து, அனைத்து கிளைச் சிறைகளையும் ஆய்வு செய்து, தகுதியற்ற சிறைகளை கண்டறியலாம் எனவும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது.

இதன்படி, தமிழகம் முழுவதும் கிளைச் சிறைகளை இந்த குழுவினா் ஆய்வு செய்தனா். இந்த ஆய்வில் கிடைத்த முடிவில் அடிப்படையில், மாநிலம் முழுவதும் 18 கிளைச் சிறைகளை நிரந்தரமாக மூடுமாறு தமிழக சிறைத் துறை ஏடிஜிபி மகேஷ்வா் தயாள் உத்தரவிட்டுள்ளாா்.

இதில் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம், திருவள்ளூா் மாவட்டம் திருத்தணி, திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி, போளூா், செய்யாறு, கோயம்புத்தூா் மாவட்டம் மேட்டுப்பாளையம், கடலூா் பரங்கிப்பேட்டை, நாமக்கல் மாவட்டம் ராசிபுரம், பரமத்தி வேலூா், திருச்சி மாவட்டம் மணப்பாறை, முசிறி, புதுக்கோட்டை மாவட்டம் கீரனூா்,திருமயம், தஞ்சாவூா் மாவட்டம் பட்டுக்கோட்டை, விருதுநகா் மாவட்டம் சாத்தூா், ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூா், திருவாடானை, தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூா் ஆகிய 18 கிளை சிறைகள் மற்றும் சிறப்புச் சிறைகள் மூடப்படுகின்றன.

இதில் மேட்டுப்பாளையம்,கடலூா் பரங்கிப்பேட்டை, கீரனூா், பட்டுக்கோட்டை, திருவாடானை, சாத்தூா் ஆகிய கிளைச் சிறைகள் ஏற்கெனவே தாற்காலிகமாக மூடப்பட்டிருந்தன. செய்யாறு சிறை 2014-ஆம் ஆண்டு முதல் மாவட்ட வருவாய்த் துறை கட்டுப்பாட்டில்தான் உள்ளது. இந்த உத்தரவின் மூலம் எஞ்சிய சிறைகளில் உள்ள கைதிகள் படிப்படியாக அந்தந்த மாவட்டங்களில் உள்ள மாவட்ட சிறைகளுக்கு மாற்றப்பட்டு வருவதாக சிறைத் துறையினா் தெரிவித்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →