தமிழகத்தின் கூட்டணி ஃபார்முலா புதுவைக்கும் பொருந்தும்! கிரிஷ் சோடங்கர் சிறப்புப் பேட்டி!!
பிகார், மகாராஷ்டிரத்தில் வலுவுடன் இருந்த கட்சிகளை அழித்த பாஜக, தமிழகத்தில் அதிமுக மீது சவாரி செய்து அதையே அழித்துவிடும் என்று தமிழகம் மற்றும் புதுச்சேரி காங்கிரஸுக்கான அகில இந்திய காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தெரிவித்துள்ளார்.
பிகார், மகாராஷ்டிரத்தில் வலுவுடன் இருந்த கட்சிகளை அழித்த பாஜக, தமிழகத்தில் அதிமுக மீது சவாரி செய்து அதையே அழித்துவிடும் என்று தமிழகம் மற்றும் புதுச்சேரி காங்கிரஸுக்கான அகில இந்திய காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தெரிவித்துள்ளார்.
தமிழக தேர்தல் தேதி அடுத்த சில நாள்களில் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில் தேர்தல் களம் விறுவிறுப்படைந்துள்ளது.
அண்மையில் தமிழகத்தில் ஆளும் திமுகவுடன் நீண்ட இழுபறிக்குப் பிறகு தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்த காங்கிரஸ், புதுச்சேரியில் எந்த முன்னேற்றத்தையும் காணாமல் ஆரம்ப நிலையிலேயே இருக்கிறது.
இந்நிலையில், தற்போதைய தேர்தல் களம், நடிகர் விஜய்யின் தவெக உடனான உறவு, கூட்டணி எதிர்காலம் குறித்து தினமணியின் ம.ஆ. பரணிதரன், ஆர். ரங்கபாஷ்யம், ராம்குமாருக்கு கிரிஷ் சோடங்கர் அளித்த சிறப்புப் பேட்டியில் பல்வேறு விஷயங்களில் கட்சியின் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தினார்.
அவரது நேர்காணலில் இருந்து....
தொகுதிப் பங்கீட்டில் வெறும் 28 தொகுதிகள், ஒரு மாநிலங்களவை உறுப்பினர் இடத்தை திமுகவிடம் இருந்து பெற்றிருக்கிறீர்கள். இதற்காகவா மாதக்கணக்கில் போராடினீர்கள்?
கடந்த தேர்தலில் 25 தொகுதிகளை திமுகவிடம் இருந்து பெற்றோம். இம்முறை 28 தொகுதிகளுடன் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் இடமும் உறுதியளிக்கப்பட்டிருக்கிறது. எண்ணிக்கை பேர முடிவு எல்லோருக்கும் எப்போதும் மகிழ்ச்சியளிக்காது.
அப்படியானால், தொகுதிப் பங்கீட்டில் காங்கிரஸ் மகிழ்ச்சியாக இல்லை என்று கொள்ளலாமா?
தியாகங்கள் மூலம்தான் கூட்டணி உருவாகிறது. மகிழ்ச்சியாக இல்லை என்றாலும், இப்போதைக்குத் திருப்தி அடைந்திருக்கிறோம். சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்வதில்தான் இப்போதைய உடனடி கவனம் இருக்கிறது. தேர்தலுக்குப் பிறகுதான் கட்சியை வலுப்படுத்துவது குறித்து யோசிக்க முடியும்.
தவெகவுடன் கூட்டணி சேரும் வாய்ப்பை காங்கிரஸ் தவற விட்டுவிட்டதாகக் கருதுகிறீர்களா?
தவெகவுடன்தான் கூட்டணி சேர வேண்டும் எனக் குறிப்பிட்டு எந்தவொரு காங்கிரஸ் தலைவரும் வலியுறுத்தவில்லை. தவெக எங்கள் பலத்தையும் ராகுலின் தலைமைத்துவத்தையும் அங்கீகரித்து தொகுதிப் பங்கீட்டுக்கு முன்வந்ததாக நான் தெரிவித்த கருத்துகளை ஊடகங்கள் வேறுமாதிரி பொருள்பட்டுக்கொண்டு செய்தி வெளியிட்டுவிட்டன.
ராகுலின் மனநிலை எவ்வாறு இருந்தது?
அதிகமான இடங்களில் போட்டியிட வேண்டும், அதிகாரப் பகிர்வு வேண்டும் என எந்தத் தலைமையும் விரும்பவே செய்யும். கட்சி வளர்ச்சியில் தலைவர்கள் சமரசம் செய்து கொள்வதில்லை. காங்கிரஸ் மத்திய தலைமையும் அதையே செய்தது.
அதிகாரப் பகிர்வுக்கு இடமே இல்லை என்ற திமுகவுடன் சமரசம் கொண்டதை தொண்டர்கள் ஏற்றுக்கொள்வார்களா?
அது முடிந்துபோன விஷயம். கடந்த காலங்களில் தமிழகத்தில் முதல்முறையாக அமைந்த காங்கிரஸ் ஆட்சியில் அதிகாரப் பகிர்வு இருந்தது. கூட்டணிகளில் கொள்கைகள் அடிப்படையில் முடிவுகள் எடுக்கப்படுகின்றன. இனியும் அதுகுறித்து பேச விரும்பவில்லை.
திமுகவுடன் பேசிக்கொண்டே தவெகவுடனும் காங்கிரஸ் பேச்சுவார்த்தை நடத்தியது உண்மையா?
காங்கிரஸ் ஒரு பேரியக்கம். யாரேனும் அக்கட்சியுடன் பேசியிருக்கலாம். அதை மறுக்கவில்லை. இது தேர்தல் காலம். விவாதங்கள் எல்லா நிலைகளிலும் நடக்கும். அதை தேர்தல் கூட்டணி எனக் கருத வேண்டியதில்லை.
திமுகவுடனான தொகுதிப் பங்கீடு ஒப்பந்தத்தில் மேலிடப் பார்வையாளருக்குப் பதிலாக, மாநிலத் தலைவர் கையொப்பமிட்டதன் பின்னணி என்ன?
நான் அறிந்தவரை இரு கட்சிகளின் மாநிலத் தலைவர்கள்தான் தொகுதிப் பங்கீட்டு உடன்படிக்கையில் கையொப்பமிடுவது வழக்கம். சில விதிவிலக்குகள் இருந்திருக்கலாம். மேலிடப் பொறுப்பாளரான நானோ, மாநிலத் தலைவரோ காங்கிரஸ் மேலிடத்தால்தான் நியமிக்கப்படுகிறோம். தலைமை சார்பில் யார் வேண்டுமானாலும் கையொப்பமிடலாம்.
ராகுலும் பிரியங்காவும் கேரளத்துக்கு அதிகமாக வந்து போகின்றனர். ஆனால், தமிழகத்துக்கு அவர்கள் அதிகம் வருவதில்லையே...
ராகுலின் தமிழக பயணம் மார்ச் 5-ஆம் தேதி திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், பொதுக்கூட்ட நிலையான வழிகாட்டுதல்கள் அமல் காரணமாக அவரது பயணத்துக்கு அனுமதி கிடைக்கவில்லை. பிரியங்காவும் ராகுலும் நிச்சயம் தமிழக தேர்தல் பரப்புரைக்கு வருவார்கள்.
தமிழகத்தில் உருவாகியுள்ள பலமுனைப் போட்டியால் உங்கள் அணிக்கு வெற்றிவாய்ப்பு குறைந்துள்ளதா?
தமிழகத்தில் ஆளும் திமுக கடந்த ஐந்து ஆண்டுகளில் எண்ணற்ற நலத் திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளது. பயனாளிகளுக்கு பண உதவி நேரடியாக வழங்கப்படுகிறது. இவை நடுத்தர மற்றும் வறியநிலை மக்களுக்குப் பெரிதும் பலன் அளித்துள்ளன. மக்களுக்குப் புதிய நம்பிக்கை விதைக்கப்பட்டுள்ளது. அது தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி அமைக்க வாய்ப்பாக அமைந்து புதிய வரலாற்றுச் சாதனையைப் படைக்கும்.
உங்கள் அணிக்கு வாக்காளர்கள் வாக்களிக்க மூன்று வலுவான காரணங்களை நியாயப்படுத்த முடியுமா?
மதவாதம் என்கிற விஷத்தன்மை வாய்ந்த பாஜக தமிழகத்தில் நுழைய அனுமதிக்கக் கூடாது. அது தமிழக கலாசாரம், எதிர்காலம், சித்தாந்தத்துக்கு எதிரானது. அது தமிழகத்தின் தனித்துவ அடையாளத்தை அழிக்க அனுமதிக்கக் கூடாது.
பாஜகவுடன் உறவு கொள்ளத் தொடங்கியதுமுதல் அதிமுகவும் அழிவை நோக்கிச் சென்றுள்ளது. பிகாரில் நிதீஷ் குமாரை அழித்த பாஜக, மகாராஷ்டிரத்தில் சிவசேனையை அழித்தது. யார் மீது சவாரி செய்கிறதோ அதையே பாஜக அழிக்கும். இப்போது தமிழகத்தில் அதிமுக மீது பாஜக சவாரி செய்கிறது. அதிமுகவின் அடையாளத்தை அழிக்கும் வேலைகளை ஏற்கெனவே பாஜக தொடங்கிவிட்டது.
தமிழகத்தில் ஆளும் அமைச்சர்கள் சிலர் பணப் பரிவர்த்தனை, ஊழல் வழக்குகளில் சோதனை நடவடிக்கைகளை எதிர்கொள்வது தேர்தலில் பாதகமாகாதா?
மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்ததுமுதல் ஆட்சி அதிகாரத்தைப் பிடிக்க தேர்தல் ஆணையம் உள்ளிட்ட அரசமைப்புகள் மற்றும் புலனாய்வு அமைப்புகள் தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன. தேர்தல் ஆணையம், அமலாக்க இயக்குநரகம், சிபிஐ, வருமான வரித் துறை போன்றவை பாஜகவின் அணிகள்போலச் செயல்படுகின்றன. இவற்றை எல்லாம் தமிழக மக்கள் பொருட்படுத்தாது வாக்குரிமையைச் செலுத்துவர்.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கை மூலம் தமிழகத்தில் சுமார் ஒரு கோடி வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. இது தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என நம்புகிறீர்களா?
தமிழகத்தில் ஆளும் திமுக மற்றும் அதன் கூட்டணிக்கு களத்தில் வாக்குச்சாவடி நிலையிலான முகவர்கள் அடங்கிய வலுவான வலையமைப்பு உள்ளது. காங்கிரஸ் கட்சியிலும் 22,000 கிராமக் குழுக்கள் மற்றும் 60,000 வாக்குச்சாவடி நிலையிலான முகவர்கள் உள்ளனர். மாவட்ட, வட்டார, பூத் அளவிலான குழுக்கள் களத்தில் தொடர் கண்காணிப்பில் உள்ளதால் தவறுகள் நடக்காமல் பார்த்துக் கொள்கிறோம்.
தமிழகத்தில் வேகமெடுத்த திமுக-காங்கிரஸ் கூட்டணி, புதுச்சேரியில் மந்தமாக இருப்பது ஏன்?
தமிழகத்தில் கூட்டணிக்குத் தலைமை தாங்குவது திமுக, புதுச்சேரியில் கூட்டணிக்குத் தலைமை தாங்குவது காங்கிரஸ். தமிழகத்தில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை முடிந்து உடன்பாடும் கையொப்பமாகிவிட்டது.
புதுச்சேரியில் பேச்சுவார்த்தையை தொடங்க முறைப்படி அழைப்பு விடுத்துள்ளோம். தாமதம் ஏற்பட்டாலும் விரைவில் பேச்சுவார்த்தை நடக்கும். ஆட்சிப் பகிர்வு விவகாரத்தில் தமிழகத்தில் என்ன கடைப்பிடிக்கப்படுகிறதோ, அதுவே புதுச்சேரிக்கும் பொருந்தும்.