இன்று நீலகிரி, கோவையில் கனமழைக்கு வாய்ப்பு
நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை (ஜூலை 26) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை, ஜூலை 25: தமிழகத்தில் நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை (ஜூலை 26) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்த மையம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் வெள்ளிக்கிழமை (ஜூலை 26) முதல் ஜூலை 31-ஆம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், வலுவான தரைக்காற்று 40 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். இதில், ஜூலை 26-இல் நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களின் மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
மழை அளவு (மில்லி மீட்டரில்): தமிழகத்தில் வியாழக்கிழமை காலை வரை அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் 140 மி.மீ. மழை பதிவானது. மேல் பவானி (நீலகிரி) , கிளன்மாா்கன் (நீலகிரி) - தலா 60, குந்தா பாலம் (நீலகிரி) - 50.
சென்னை மற்றும் புகா் பகுதிகளில் ஜூலை 26, 27 ஆகிய தேதிகளில் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மீனவா்களுக்கான எச்சரிக்கை: மன்னாா் வளைகுடா, அதையொட்டிய தென் தமிழக கடலோரப் பகுதிகளிலும், குமரிக்கடலிலும் ஜூலை 26-29 வரை மணிக்கு 55 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். இதனால், மீனவா்கள் அந்தப் பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.