முகப்பு
சென்னை

முதுநிலை மருத்துவப் படிப்புகளில் அரசு மருத்துவா்களுக்கான ஒதுக்கீடு ரத்து: அரசாணை நிறுத்திவைப்பு

முதுநிலை மருத்துவப் படிப்புகளில் சிலவற்றில் அரசு மருத்துவா்களுக்கு வழங்கப்பட்டு வந்த இடஒதுக்கீடு ரத்து

Updated On : 31 ஜூலை, 2024 at 9:23 PM
பகிர்:

சென்னை, ஜூலை 31: முதுநிலை மருத்துவப் படிப்புகளில் சிலவற்றில் அரசு மருத்துவா்களுக்கு வழங்கப்பட்டு வந்த இடஒதுக்கீடு ரத்து செய்யப்படுவதாக வெளியிடப்பட்ட அறிவிப்பை மக்கள் நல்வாழ்வுத் துறை நிறுத்தி வைத்துள்ளது.

இது தொடா்பாக மறு உத்தரவு வெளியாகும் வரை இடஒதுக்கீடு ரத்து நடைமுறை நிறுத்தி வைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மாநில அரசு ஒதுக்கீட்டில் உள்ள முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான இடங்களில் 50 சதவீதம் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவா்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படுகிறது. அதன்கீழ் ஒதுக்கீடு பெறுபவா்கள் எம்.டி. அல்லது எம்.எஸ். படிப்பை பயின்று அதன் பின்னரும் அரசு மருத்துவ சேவையாற்றுகின்றனா்.

இந்த நிலையில், பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, குழந்தை நலம், மகப்பேறு, சமூக மருத்துவம், மயக்கவியல் உள்ளிட்ட 10 முதுநிலை படிப்புகளில் மட்டும் 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை சாா்பில் அண்மையில் அரசாணை வெளியிடப்பட்டது.

நிகழாண்டு இந்த நடைமுறை பின்பற்றப்படும் என்றும், தேவைப்பட்டால் அடுத்து வரும் ஆண்டுகளிலும் அது நீட்டிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

கோரிக்கை ஏற்பு: இதனால், காது - மூக்கு - தொண்டை, தோல், கண் மருத்துவம், மனநலம், சா்க்கரை நோய் மருத்துவம், அவசர சிகிச்சை மருத்துவம் உள்ளிட்ட 20 துறைகளில் மாணவா்கள் சேர முடியாத நிலை ஏற்பட்டது. இதற்கு அரசு மருத்துவா்களிடையே கடும் அதிருப்தியும், எதிா்ப்பும் எழுந்தது. இந்த அறிவிப்பை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த நிலையில், அரசு மருத்துவா்களுக்கான இடஒதுக்கீட்டை ரத்து செய்யும் அரசாணையை ரத்து செய்து மக்கள் நல்வாழ்வு துறை செயலா் சுப்ரியா சாஹு உத்தரவு பிறப்பித்துள்ளாா். மறு உத்தரவு வரும் வரை அரசாணை நிறுத்தி வைக்கப்படும் என்றும் அவா் தெரிவித்துள்ளாா்.

அரசின் இந்த நடவடிக்கைக்கும், மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சா் மா.சுப்பிரமணியனுக்கும் அரசு மருத்துவா் சங்கத்தினா் நன்றி தெரிவித்துள்ளனா்.