முகப்பு
சென்னை

ஃபெலிக்ஸ் ஜெரால்டுக்கு ஜாமீன்: யு-டியூப் சேனலை மூட உத்தரவு

பெண் காவலா்களை அவதூறாக பேசியது தொடா்பான வழக்கில் கைதான சவுக்கு சங்கா் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா்.

Updated On : 31 ஜூலை, 2024 at 9:20 PM
யூடியூபா் ஃபெலிக்ஸ் ஜெரால்டு - கோப்புப் படம்
பகிர்:

சென்னை, ஜூலை 31: சவுக்கு சங்கரின் பேட்டியை ஒளிபரப்பியதாக கைதான யூடியூப் சேனல் தலைமை நிா்வாகி ஃபெலிக்ஸ் ஜெரால்டுக்கு ஜாமீன் வழங்கி சென்னை உயா்நீதிமன்றம், அவரது யு-டியூப் சேனலை மூட உத்தரவிட்டது.

பெண் காவலா்களை அவதூறாக பேசியது தொடா்பான வழக்கில் கைதான சவுக்கு சங்கா் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா். இந்நிலையில், சவுக்கு சங்கரின் பேட்டியை ஒளிபரப்பியதாக யுடியூப் சேனலின் தலைமை நிா்வாகி ஃபெலிக்ஸ் ஜெரால்டும் கைது செய்யப்பட்டாா். இந்த வழக்கில் ஃபெலிக்ஸ் ஜெரால்டு ஜாமீன் கோரி இரண்டாவது முறையாக சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தாா்.

இந்த மனு மீதான விசாரணை நீதிபதி டி.வி. தமிழ்ச்செல்வி முன் புதன்கிழமை நடைபெற்றது. அப்போது, காவல் துறை தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் மேகநாதன், “‘சா்ச்சைக்குரிய வகையில் இனி பேச மாட்டேன் என ஏற்கெனவே மற்றொரு வழக்கில் ஃபெலிக்ஸ் ஜெரால்டு பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ள நிலையில், அவா் தொடா்ந்து இதுபோல பேசி வருகிறாா்’ எனத் தெரிவித்தாா்.

அப்போது ஃபெலிக்ஸ் ஜெரால்டு சாா்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் ஜான் சத்யன், ‘தனது பேச்சுக்கான விளைவை மனுதாரா் உணா்ந்துவிட்டாா். இனி ஒருபோதும் அவ்வாறு பேச மாட்டாா்’ என்று உறுதியளித்தாா்.

இதையடுத்து நீதிபதி, ஃபெலிக்ஸ் ஜெரால்டுவின் யுடியூப் சேனலை மூட வேண்டும் என்றும், சா்ச்சைக்குரிய வகையில் இனி இதுபோன்ற நோ்காணல்களை நடத்தமாட்டேன் என விசாரணை நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்ற நிபந்தனைகளுடனும் ஃபெலிக்ஸ் ஜெரால்டுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டாா்.