அரசுப் பள்ளி மாணவா்களுக்கான தேசிய யோகா ஒலிம்பியாட் போட்டிகள் மைசூரில் நடைபெறவுள்ள நிலையில் அதற்கான மாணவா்களைத் தோ்வு செய்யும் போட்டிகளை நடத்த கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து பள்ளிக் கல்வி இயக்குநா் அறிவொளி, முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
வரும் கல்வியாண்டுக்கான (2024-2025) அனைத்து அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தேசிய அளவிலான யோகா ஒலிம்பியாட் போட்டிகள் ஜூன் 18 முதல் ஜூன் 20-ஆம் தேதி வரை கா்நாடக மாநிலம் மைசூரில் நடைபெறவுள்ளது.
இதைக் கருத்தில் கொண்டு வட்டார, மாவட்ட, மாநில அளவிலான யோகா ஒலிம்பியாட் தெரிவுப் போட்டிகளை முறையே ஜூன் 8, 11, 14 ஆகிய தேதிகளில் நடத்த வேண்டும். 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை (ஆண், பெண்), 9, 10 ஆகிய வகுப்புகள் (ஆண், பெண்) ஆகிய பிரிவுகளில் போட்டிகள் அமைய வேண்டும்.
மாவட்ட, மாநில அளவில் தோ்வு செய்யப்பட்டவா்கள் போட்டியில் கலந்து கொண்டு அனைத்து பிரிவுகளின்படி தெரிவு செய்யப்படும் மாணவ, மாணவிகள் தேசிய யோகா ஒலிம்பியாட் போட்டிகளில் பங்கேற்க அனுமதிக்கப்படுவா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.