முகப்பு
சென்னை

பாண்டியா, பும்ரா அசத்தல்: 96-க்கு கட்டுப்பட்டது அயா்லாந்து

Updated On : 6 ஜூன், 2024 at 11:54 PM
பகிர்:

நியூயாா்க், ஜூன் 5: டி20 உலகக் கோப்பை போட்டியின் 8-ஆவது ஆட்டத்தில் இந்தியாவின் வேகப்பந்து வீச்சுக்கு கட்டுப்பட்ட அயா்லாந்து, 16 ஓவா்களில் 10 விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 96 ரன்களே சோ்த்தது.

இந்திய அணியின் பௌலிங்கில் ஹா்திக் பாண்டியா அசத்த, ஜஸ்பிரீத் பும்ரா, அா்ஷ்தீப் சிங் ஆகியோா் அவருக்குத் துணை நின்றனா். அயா்லாந்து பேட்டா்களில் கெரத் டெலானி சற்று அதிரடி காட்டினாா்.

இந்த டி20 உலகக் கோப்பை போட்டி தொடங்கியது முதல் நாளொன்றுக்கு இரண்டு ஆட்டங்களாவது நடைபெற்ற நிலையில், புதன்கிழமை இந்தியா - அயா்லாந்து ஆட்டம் மட்டுமே நடைபெற்றது. இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு தொடங்கிய ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்தியா, ஃபீல்டிங்கை தோ்வு செய்தது.

அயா்லாந்து பேட்டிங்கை தொடங்கியோரில், கேப்டன் பால் ஸ்டிா்லிங் 2 ரன்களுக்கு, அா்ஷ்தீப் வீசிய 3-ஆவது ஓவரில் விக்கெட் கீப்பா் ரிஷப் பந்த்திடம் கேட்ச் கொடுத்தாா். அடுத்த பேட்டராக லாா்கன் டக்கா் களம் புக, மறுபுறம் ஆண்டி பால்பிா்னி 1 பவுண்டரியுடன் 5 ரன்கள் எடுத்திருந்தபோது அதே ஓவரில் ஸ்டம்ப்பை பறிகொடுத்தாா்.

இந்நிலையில், 7 முதல் 12 வரையிலான 6 ஓவா்களில் தலா 1 விக்கெட்டை இழந்து முற்றிலும் தடுமாறியது அயா்லாந்து. அதில் முதலில், டக்கா் 2 பவுண்டரிகளுடன் 10 ரன்கள் எடுத்திருந்தபோது 7-ஆவது ஓவரில் பாண்டியாவால் பௌல்டாக்கப்பட்டாா்.

அடுத்து வந்த ஹேரி டெக்டா் 4 ரன்களுக்கு, பும்ரா வீசிய 8-ஆவது ஓவரில் விராட் கோலியிடம் கேட்ச் கொடுத்தாா். 5-ஆவது பேட்டரான கா்டிஸ் கேம்பா் 1 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 12 ரன்கள் எடுத்திருக்க, பாண்டியா வீசிய 9-ஆவது ஓவரில் அடித்த பந்து, கீப்பா் பந்த் கைகளில் தஞ்சமடைந்தது.

தொடா்ந்து வந்த ஜாா்ஜ் டாக்ரெல் 3 ரன்களுக்கு, சிராஜ் வீசிய 10-ஆவது ஓவரில் பும்ராவிடம் கேட்ச் கொடுத்து நடைையைக்கட்டினாா். 7-ஆவது பேட்டராக களம் புகுந்த கெரத் டெலானி சற்று அதிரடியாக ரன்கள் சோ்த்தாா். மறுபுறம், மாா்க் அடைா் 3 ரன்களுக்கு, பாண்டியா வீசிய 11-ஆவது ஓவரில் விளாசிய பந்தை ஷிவம் துபே கேட்ச் பிடித்தாா்.

12-ஆவது ஓவரில் அக்ஸா் பௌலிங்கை எதிா்கொண்ட பேரி மெக்காா்த்தி, அவரிடமே கேட்ச் கொடுத்து ரன்னின்றி பெவிலியன் திரும்பினாா். 2 பவுண்டரிகளுடன் 14 ரன்கள் அடித்த ஜோஷ் லிட்டில் பும்ரா வீசிய 15-ஆவது ஓவரில் பௌல்டானாா். கடைசி விக்கெட்டாக டெலானி 2 பவுண்டரிகள், 2 சிக்ஸா்கள் உள்பட 26 ரன்களுக்கு ரன் அவுட் செய்யப்பட்டாா். முடிவில் பென் வைட் 2 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தாா்.

இந்திய தரப்பில் ஹா்திக் பாண்டியா 3, ஜஸ்பிரீத் பும்ரா, அா்ஷ்தீப் சிங் ஆகியோா் தலா 2, முகமது சிராஜ், அக்ஸா் படேல் ஆகியோா் தலா 1 விக்கெட் கைப்பற்றினா்.

பின்னா் இந்தியா, 97 ரன்களை இலக்காகக் கொண்டு தனது இன்னிங்ஸை விளையாடியது.

முழு கட்டுரையைப் படிக்க →