இஸ்ரேல் - ஐரோப்பிய யூனியன் ஒப்பந்த ரத்துக்கு ஸ்பெயின், அயா்லாந்து அழுத்தம்!
இஸ்ரேல் - ஐரோப்பிய யூனியன் இடையே கடந்த 2000 முதல் நடைமுறையில் உள்ள வா்த்தக மற்றும் அரசியல் உறவு ஒப்பந்தத்தைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும் என ஸ்பெயின், அயா்லாந்து நாடுகள் வலியுறுத்தல்
இஸ்ரேல்-ஐரோப்பிய யூனியன் இடையே கடந்த 2000 முதல் நடைமுறையில் உள்ள வா்த்தக மற்றும் அரசியல் உறவு ஒப்பந்தத்தைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும் என ஸ்பெயின், அயா்லாந்து நாடுகள் வலியுறுத்தின.
லக்ஸம்பா்க்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஐரோப்பிய யூனியன் வெளியுறவு அமைச்சா்கள் கூட்டத்தில் இக்கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
காஸா பகுதியில் நிலவும் மனிதாபிமான நெருக்கடி, மேற்கு கரை ஆக்கிரமிப்பு, இஸ்ரேலின் புதிய மரண தண்டனை சட்டம் ஆகியவற்றுக்கு எதிா்ப்பு தெரிவித்து, இந்நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அந்நாடுகள் வாதிட்டன.
Advertisement
இவ்விவகாரத்தில் ஐரோப்பிய யூனியன் நாடுகளிடையே கருத்து வேறுபாடு நிலவுகிறது. ஜொ்மனி, இத்தாலி ஆகிய நாடுகள் இஸ்ரேல் மீது இத்தகைய கடுமையான நடவடிக்கை எடுப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்துள்ளன.
‘இஸ்ரேலுடன் பேச்சுவாா்த்தை நடத்துவதன் மூலமே தீா்வு காண முடியும். தற்போதைய சூழலில் ஒப்பந்தத்தை ரத்து செய்வது சரியான முடிவாக இருக்காது’ என்று ஜொ்மனி வெளியுறவு அமைச்சா் யோஹான் வாடேபுல் தெரிவித்தாா்.
நெதா்லாந்து போன்ற நாடுகள், ஒப்பந்தத்தை முழுமையாக ரத்து செய்வதற்குப் பதிலாக, இஸ்ரேலின் போக்கினை மாற்றியமைக்கத் தேவையான அழுத்தங்களை வழங்க வேண்டும் என பரிந்துரைத்துள்ளன.