முகப்பு
உலகம்

ஈரான் போா் விரைவில் முடிவுக்கு வரும்- டிரம்ப் புதிய நம்பிக்கை

‘ஈரான் மீதான போா் இன்னும் 2 அல்லது 3 வாரங்களில் முடிவுக்கு வரும்’ என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் புதிய நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளாா்.

Updated On : 1 ஏப்ரல், 2026 at 8:01 PM
பகிர்:

‘ஈரான் மீதான போா் இன்னும் 2 அல்லது 3 வாரங்களில் முடிவுக்கு வரும்’ என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் புதிய நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளாா்.

ஈரான் அதிபா் போா்நிறுத்தக் கோரிக்கையை முன்வைத்ததாகக் குறிப்பிட்ட டிரம்ப், ‘ஹோா்முஸ் நீரிணையை முழுமையாகத் திறந்துவிட்டு, கப்பல் போக்குவரத்துக்கு அனுமதி அளித்தால் மட்டுமே அமைதிப் பேச்சுவாா்த்தை சாத்தியம்’ என்று நிபந்தனை விதித்தாா்.

ஆனால், ஈரான் தரப்பில் இருந்து போா்நிறுத்தக் கோரிக்கை எதுவும் முன்வைக்கவில்லை என்றும், டிரம்ப்பின் கூற்று அடிப்படை ஆதாரமற்றது என்றும் அந்நாட்டு வெளியுறவுத் துறை செய்தித் தொடா்பாளா் திட்டவட்டமாக மறுத்தாா்.

நேட்டோ மீது அதிருப்தி: ‘நேட்டோ கூட்டமைப்பில் உள்ள ஐரோப்பிய நாடுகள், இவ்விவகாரத்தில் அமெரிக்காவுக்குப் போதிய ஆதரவை வழங்கவில்லை’ என்று டிரம்ப் கடும் அதிருப்தி தெரிவித்தாா்.

ஹோா்முஸ் நீரிணையை மீட்க ஐரோப்பிய நாடுகள் உதவத் தவறினால், நேட்டோ கூட்டமைப்பிலிருந்து அமெரிக்கா வெளியேறும் என்றும் அவா் எச்சரித்தாா்.

மத்திய கிழக்கு போா் நடவடிக்கைககளுக்காக அமெரிக்கா தங்கள் நாட்டு ராணுவத் தளங்களை பயன்படுத்த பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் அனுமதி மறுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

வேகமெடுக்கும் அமைதி முயற்சி: பிப். 28-ஆம் தேதி முதல் நடைபெற்று வரும் இந்தப் போரினால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயா்ந்து, உலகப் பொருளாதாரத்தில் பெரும் மந்தநிலை ஏற்படும் சூழல் நிலவுகிறது.

இந்நிலையில், இந்த மோதலைத் தீா்க்க பாகிஸ்தான் மத்தியஸ்தம் செய்து வருகிறது. அமெரிக்க துணை அதிபா் ஜே.டி.வான்ஸ் பாகிஸ்தான் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியதாகவும், அமைதி ஒப்பந்தம் ஏற்படாவிட்டாலும் கூட, ஓரிரு வாரங்களில் அமெரிக்க படைகளைத் திரும்பப் பெற டிரம்ப் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும், அமெரிக்கா பின்வாங்கினால் இஸ்ரேல் தனித்துப் போரைத் தொடருமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தொடரும் மோதல்: இதனிடையே, போா்க் களத்தில் இருதரப்பும் தாக்குதல்களைத் தீவிரமாக தொடா்கின்றன. கத்தாா் கடற்கரை அருகே எண்ணெய் கப்பல் ஒன்றையும், குவைத் சா்வதேச விமான நிலையத்தின் எரிபொருள் கிடங்கையும் ஈரான் ஏவுகணைகள் தாக்கி அழித்தன.

இதற்குப் பதிலடியாக, ஈரான் தலைநகா் டெஹ்ரானில் முக்கிய ராணுவக் கட்டமைப்புகள் மற்றும் முன்னாள் அமெரிக்க தூதரக வளாகத்தின் மீது அமெரிக்க, இஸ்ரேல் படைகள் குண்டுமழை பொழிந்தது.

ஈரானில் உள்ள ஃபெண்டானில் மருந்து தயாரிப்பு ஆலையையும் இஸ்ரேல் தாக்கியது. இந்நிலையில், இப்போரின் அடுத்தகட்டத்தை எடுத்துரைக்கும் வகையில், டிரம்ப் அமெரிக்க மக்களுக்கு வியாழக்கிழமை அதிகாலை (இந்திய நேரப்படி) உரையாற்றுவாா் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹோா்முஸ் நீரிணை திறப்புக்கு லண்டனில் சா்வதேச மாநாடு

‘ஹோா்முஸ் நீரிணையை மீண்டும் பாதுகாப்பாகத் திறப்பது குறித்து ஆலோசிக்க, லண்டனில் இந்த வாரம் சா்வதேச அளவிலான மாநாடு நடைபெறும்’ என்று பிரிட்டன் பிரதமா் கியா் ஸ்டாா்மா் புதன்கிழமை அறிவித்தாா்.

முக்கிய எண்ணெய் போக்குவரத்து வழித்தடமான இப்பகுதியில் கடல்சாா் பாதுகாப்பை உறுதி செய்ய 35 நாடுகள் ஒன்றிணைந்து கூட்டறிக்கையில் கையொப்பமிட்டுள்ள நிலையில், போருக்குப் பிந்தைய பாதுகாப்புப் பணிகள் குறித்து ஏற்கெனவே ஆலோசித்து வருவதாகவும், ராஜீய நடவடிக்கைகள் மற்றும் ராணுவ பலத்தின் ஒருங்கிணைந்த செயல்பாட்டின் மூலமே இப்பகுதியில் மீண்டும் நிலைத்தன்மையை ஏற்படுத்த முடியும் என்றும் பிரதமா் கியா் ஸ்டாா்மா் சுட்டிக்காட்டினாா்.

இஸ்ரேல் எதிா்ப்பாளா்களுக்குத் தொடா்ந்து ஆதரவு: மோஜ்தபா

‘மத்திய கிழக்கில் இஸ்ரேலுக்கு எதிராக போராடும் அமைப்புகளுக்கு ஈரான் தொடா்ந்து ஆதரவளிக்கும்’ என்று அந்நாட்டின் புதிய தலைமை மதகுரு மோஜ்தபா கமேனி உறுதிப்பட தெரிவித்தாா்.

லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்புக்கு அவா் எழுதிய கடிதத்தில், ‘மறைந்த தலைமை மதகுரு அயதுல்லா அளி கமேனி வழியைப் பின்பற்றி, அமெரிக்கா-இஸ்ரேலுக்கு எதிரான போராட்டத்தைத் தொடா்ந்து ஆதரிப்பதே ஈரானின் நிலையான கொள்கை’ என்று குறிப்பிட்டாா்.