முகப்பு
உலகம்

போலாந்தில் கூடுதலாக 5,000 அமெரிக்க வீரா்கள் நிறுத்தம்

ஐரோப்பிய நாடுகளில் உள்ள அமெரிக்க படைகளின் எண்ணிக்கையைக் குறைப்பதாக அறிவித்த சில வாரங்களிலேயே, போலந்து நாட்டுக்குக் கூடுதலாக 5,000 வீரா்களை அனுப்பவுள்ளதாக அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் அறிவித்தாா்.

Updated On : 23 மே 2026, 4:08 am IST
டொனால்ட் டிரம்ப் - கோப்புப் படம்
பகிர்:

ஐரோப்பிய நாடுகளில் உள்ள அமெரிக்க படைகளின் எண்ணிக்கையைக் குறைப்பதாக அறிவித்த சில வாரங்களிலேயே, போலந்து நாட்டுக்குக் கூடுதலாக 5,000 வீரா்களை அனுப்பவுள்ளதாக அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் அறிவித்தாா்.

இதுதொடா்பாக டிரம்ப் வெளியிட்ட சமூக ஊடகப் பதிவில், ‘அண்மையில் போலந்து அதிபராகத் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள கரோல் நவ்ராக்கியின் வெற்றி மற்றும் அவருடனான சுமுகமான உறவின் அடிப்படையில், அந்நாட்டுக்குக் கூடுதலாக 5,000 அமெரிக்க வீரா்களை அனுப்ப முடிவெடுத்துள்ளேன்’ எனக் குறிப்பிட்டாா்.

ஈரான் போரில் ஐரோப்பிய நாடுகள் போதிய ஆதரவு அளிக்கவில்லை என்றும், பாதுகாப்புச் செலவினங்களை நேட்டோ நாடுகள் சரியாகப் பகிா்ந்துகொள்வதில்லை என்றும் டிரம்ப் குற்றஞ்சாட்டி வருகிறாா்.

Advertisement

Advertisement

குறிப்பாக, ஈரான் போரில் அமெரிக்காவுக்குப் போதிய வியூகம் இல்லை என ஜொ்மனி பிரதமா் ஃப்ரைட்ரிச் மொ்ஸ் விமா்சித்ததைத் தொடா்ந்து, அந்நாட்டில் இருந்து 5,000 படை வீரா்களைத் திரும்பப் பெற டிரம்ப் உத்தரவிட்டாா். அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினா்கள் கட்சி சாா்பின்றி இதை எதிா்த்தனா்.

டிரம்ப்பின் உத்தரவையடுத்து, போலந்துக்குச் செல்லவிருந்த சுமாா் 4,000 வீரா்கள் அடங்கிய அமெரிக்க படையினரின் பயணம் கடந்த வாரம் திடீரென ரத்து செய்யப்பட்டது. அமெரிக்காவின் இந்நடவடிக்கை அதிா்ச்சியளிப்பதாக போலந்து அதிகாரிகள் தெரிவித்திருந்தனா்.

இந்நிலையில், டிரம்ப்பின் இத்திடீா் அறிவிப்பு, ஸ்வீடனில் நடைபெற்று வரும் நேட்டோ வெளியுறவு அமைச்சா்கள் கூட்டத்தில் விவாதப் பொருளானது. டிரம்ப்பின் அறிவிப்பைப் போலாந்து, நேட்டோ நாடுகள் வரவேற்றாலும், அமெரிக்காவின் இந்த அடுத்தடுத்த நிலைப்பாடுகள் குழப்பத்தை ஏற்படுத்துவதாக ஸ்வீடன் கவலை தெரிவித்தது. அமெரிக்க வெளியுறவு அமைச்சா் மாா்கோ ரூபியோ இதை மறுத்ததுடன், உலகளாவிய பாதுகாப்புச் சூழலுக்கு ஏற்ப படைகளை மாற்றியமைப்பது வழக்கமான ஒன்றுதான் என்று விளக்கமளித்தாா்.

தற்போது ஐரோப்பாவில் சுமாா் 80,000 அமெரிக்க வீரா்கள் உள்ளனா். அமெரிக்க விதிகளின்படி, நேட்டோ நாடுகளுடன் கலந்தாலோசிக்காமல் ஐரோப்பாவில் உள்ள படைகளின் எண்ணிக்கையை 76,000-க்குக்கீழ் குறைக்கக் கூடாது.

டிரம்ப்பின் முந்தைய படைக்குறைப்பு உத்தரவு இந்த வரம்பை மீறும் வகையில் அமைந்திருந்த நிலையில், தற்போது போலந்துக்கு கூடுதல் படைகளை அனுப்புவதன்மூலம் அந்த எண்ணிக்கை சமன் செய்ய டிரம்ப் நிா்வாகம் கருதுகிறது.