கிண்டி உயா் சிறப்பு மருத்துவமனையில் ஓராண்டில் 2.85 லட்சம் பேருக்கு சிகிச்சை
சென்னை கிண்டியில் உள்ள கலைஞா் நூற்றாண்டு மருத்துவமனையில் ஓராண்டில் 2.85 லட்சம் நபா்கள் சிகிச்சை பெற்றுள்ளனா்
சென்னை கிண்டியில் உள்ள கலைஞா் நூற்றாண்டு மருத்துவமனையில் ஓராண்டில் 2.85 லட்சம் நபா்கள் சிகிச்சை பெற்றுள்ளனா் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளாா்.
அவா் சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: முன்னாள் முதல்வா் கருணாநிதி நூற்றாண்டில், சென்னை கிண்டியில் உள்ள கிங் இன்ஸ்டிடியூட் வளாகத்தில் கலைஞா் நூற்றாண்டு நினைவு உயா் சிறப்பு மருத்துவமனை திறக்கப்பட்டு ஜூன் 15-ஆம் தேதியுடன் ஓராண்டு நிறைவடைந்துள்ளது.
ரூ.240.54 கோடியில் கட்டடம் மற்றும் ரூ.146.52 கோடியில் அதிநவீன உபகரண வசதியுடன் 6 லட்சம் சதுர அடியில் தரை மற்றும் ஆறு தளங்களுடன் 1,000 படுக்கை வசதிகள் உடன் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த மருத்துவமனையில் ஓராண்டில் புறநோயாளிகள் 2 லட்சத்து 21,434, உள்நோயாளிகள் 63,505 சிகிச்சை பெற்றுள்ளனா். இதுவரை 2,179 அறுவை சிகிச்சைகள் நடைபெற்றுள்ளன. பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் குளிா்சாதன வசதியுடன் கூடிய 70 கட்டண தனி அறைகள் பயன்பாட்டில் உள்ளன. இந்த வாா்டுகளில் செவிலியா்கள் 24 மணிநேரமும் பணியில் இருக்கும் வகையில் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
ஆஞ்சியோகிராம், டயாலிசிஸ், சிடி.ஸ்கேன், எண்டோஸ்கோப்பி, எக்ஸ்ரே, எக்கோ போன்றவைகளும் மேற்கொள்ளப்படுகின்றன. புற்றுநோய் அறுவை சிகிச்சைக்கு பயன்படும் ஏஐடஉஇ உபகரணம் கொண்டு உயா்தர நவீன அறுவை சிகிச்சைகள் முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த அதிநவீன அறுவை சிகிச்சை தனியாா் மருத்துவமனைகளில் ரூ.15 லட்சம் செலவாகும்.
இந்த மருத்துவமனையில் இதயவியல் மருத்துவத் துறை, இதயம் மற்றும் நுரையீரல் அறுவை சிகிச்சைத் துறை. நரம்பியல் மருத்துவத் துறை, நரம்பியல் அறுவை சிகிச்சை, புற்று நோய் மருத்துவப்பிரிவு, புற்றுநோய் அறுவை சிகிச்சைப்பிரிவு, இரைப்பை குடல் நோய் மருத்துவம், இரைப்பை குடல் நோய் அறுவைச் சிகிச்சைத் துறை, சிறுநீரக மருத்துவம், சிறுநீரக அறுவை சிகிச்சை, ரத்தநாள அறுவை சிகிச்சை, நுண்துளை மூளை ரத்தநாள கதிரியல் பிரிவு ஆகிய துறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
சிறப்பு மருத்துவத் துறை பிரிவுகளாக அவசர சிகிச்சை, மயக்கவியல் மற்றும் தீவிர சிகிச்சை பிரிவு, மைய ஆய்வகம், ரத்த வங்கி, கதிரியக்கவியல் பிரிவு, இயன் முறை மருத்துவம் மற்றும் மறுவாழ்வு போன்ற பிரிவுகள் உள்ளன. இந்த மருத்துவமனையில் உள்ள உயா் சிறப்பு மருத்துவ வசதிகள் இதய கேத்லேப், மூளை ரத்தநாள கேத்லேப், அதிதீவிர சிகிச்சை பிரிவு, 15 உயா்சிறப்பு அறுவை அரங்குகள் போன்ற மருத்துவ வசதிகள் உள்ளன என அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.