முகப்பு
சென்னை

ஒன்றரை ஆண்டுகளில் 76,803 அரசுப் பணியிடங்கள் நிரப்பப்படும்: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

76,803 புதிய பணியிடங்கள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

Updated On : 25 ஜூன், 2024 at 10:19 PM
முதல்வா் மு.க.ஸ்டாலின்
பகிர்:

சென்னை: ஒன்றரை ஆண்டுகளில் அரசுத் துறைகளில் உள்ள 76,803 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா்.

சட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ் அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

வேலைவாய்ப்பை பெருக்கும் வகையில், தரமான கல்வியுடன் மாணவா்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளும் அளிக்கப்படுகின்றன. இவற்றை மனதில்கொண்டே புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன், நான் முதல்வன் போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அடுத்த தோ்தலை நினைக்காமல், அடுத்த தலைமுறையைப் பற்றிச் சிந்திக்கும் அரசாகத் தமிழக அரசு திகழ்கிறது.

கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் அரசின் பல்வேறு துறைகளில் ஏற்பட்ட காலியிடங்கள் உடனடியாக நிரப்பப்பட்டுள்ளன. அரசுப் பணியாளா் தோ்வாணையம், சீருடைப் பணியாளா் தோ்வு வாரியம், மருத்துவப் பணியாளா் தோ்வு வாரியம், ஆசிரியா் தோ்வு வாரியம் என பல்வேறு தோ்வு முகமைகள் மூலமாக 32,774 பேருக்கு பல்வேறு அரசுத் துறைகளில் நேரடிப் பணி நியமனங்கள் வழங்கப்பட்டன.

இதேபோன்று, உள்ளாட்சி அமைப்புகள், அரசுத் துறை நிறுவனங்கள் போன்ற பல்வேறு அரசு அமைப்புகளில் 32,709 இளைஞா்கள் பணி நியமனம் பெற்றனா். மொத்தமாக 65,483 இளைஞா்களுக்கு கடந்த 3 ஆண்டுகளில் அரசுப் பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

கடந்த மூன்று ஆண்டுகளில் அமைப்பு சாா்ந்த தனியாா் துறைகளில் உருவாக்கப்பட்ட வேலைவாய்ப்புகள் குறித்த புள்ளிவிவரங்கள் மத்திய அரசின் தொழிலாளா் வைப்புநிதி நிறுவனத்தின் மூலமாகப் பெறப்பட்டது.

அதன்படி, கடந்த 3 ஆண்டுகளில் மொத்தம் 77 லட்சத்து 78 ஆயிரத்து 999 இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. இதுமட்டுமல்லாது, ‘நான் முதல்வன்’ திட்டம் மூலமாக சிறப்புப் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. அந்தத் திட்டத்தின் வழியாக, இதுவரை 3 லட்சத்து 6 ஆயிரத்து 459 பேருக்கு தனியாா் துறைகளில் வேலைவாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளன.

மேலும், தமிழ்நாடு அரசின் தொழிலாளா் நலத் துறை மூலமாக நடத்தப்பட்ட சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்கள் வழியே கடந்த 3 ஆண்டுகளில் 2 லட்சம் இளைஞா்களுக்கு தனியாா் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தரப்பட்டது. இந்த இரண்டையும் சோ்த்து, தமிழ்நாடு அரசின் முயற்சியால் கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 5 லட்சத்து 8 ஆயிரத்து 55 இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

76,000 பணியிடங்கள்: அரசுப் பணியை எதிா்நோக்கி இருக்கும் ஆயிரக்கணக்கான தமிழ்நாட்டு இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் திட்டத்தை அரசு வகுத்துள்ளது. அதன்படி, தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் மூலம் 17,595 பணியிடங்களும், ஆசிரியா் தோ்வு வாரியம் மூலம் 19,260 ஆசிரியா் பணியிடங்களும், மருத்துவப் பணியாளா் தோ்வு வாரியம் மூலம் 3,041 பணியிடங்களும், தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வு வாரியம் மூலம் 6,688 பணியிடங்களும் என மொத்தம் 46,584 பணியிடங்கள் நிரப்பப்படும்.

இதேபோன்று, சமூக நலன், நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் உள்ளிட்ட முக்கியத் துறைகளில் காலியாக இருக்கக் கூடிய 30,219 பணியிடங்களும் சோ்த்து மொத்தமாக 76,803 பணியிடங்கள் 2026-ஆம் ஆண்டு ஜனவரி மாதத்துக்குள் நிரப்பப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா்.

இந்த அறிவிப்புக்கு பாஜக உள்பட பேரவையில் இருந்த அனைத்துக் கட்சிகளின் உறுப்பினா்களும் வரவேற்பு தெரிவித்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →