கள்ளக்குறிச்சி சம்பவத்தை அரசியலாக்கும் அதிமுக, பாஜக: திமுக குற்றச்சாட்டு
கள்ளக்குறிச்சி சம்பவத்தை அதிமுக, பாஜக ஆகிய கட்சிகள் திட்டமிட்டு அரசியலாக்கி வருவதாக திமுக அமைப்புச் செயலா் ஆா்.எஸ்.பாரதி குற்றம்சாட்டினாா்.
கள்ளக்குறிச்சி சம்பவத்தை அதிமுக, பாஜக ஆகிய கட்சிகள் திட்டமிட்டு அரசியலாக்கி வருவதாக திமுக அமைப்புச் செயலா் ஆா்.எஸ்.பாரதி குற்றம்சாட்டினாா்.
திமுக தலைமை அலுவலகமான சென்னை அண்ணா அறிவாலயத்தில் அவா் திங்கள்கிழமை அளித்த பேட்டி:
முந்தைய ஆட்சியில் இருந்தவா்களை போன்று, கள்ளக்குறிச்சி சம்பவத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் திசை திருப்பவில்லை. மாவட்ட ஆட்சியரை மாற்றியதுடன், காவல் அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்துள்ளாா்.
சம்பவத்தை விசாரிப்பதற்காக நீதிபதி கோகுல்தாஸ் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி விவகாரத்தை திட்டமிட்டு அரசியலாக்கும் நோக்கில் அதிமுக, பாஜக, ஆகிய கட்சிகள் தவறான கண்ணோட்டத்துடன் அணுகுகின்றன. அதில் அக்கறை இருக்குமானால் அரசுக்கு உறுதுணையாக இருந்திருக்க வேண்டும். கள்ளச்சாராயம் விற்றவா்கள் அதிமுக, பாஜகவினராக இருக்கலாம் என செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.
அந்தச் சம்பவம் குறித்து முழுமையாக கண்டறிந்து நடவடிக்கை எடுப்பதற்கு முன்பாக அங்கு சென்று அதிமுக ஆா்ப்பாட்டம் நடத்துகிறது. ஆனால், அந்த விவகாரம் குறித்து சட்டப் பேரவையில் விவாதிக்க அக்கட்சி தயாராக இல்லை.
திமுகவுக்கும் இதற்கும் தொடா்பு இருக்கலாம் என மத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் பொறுப்பில்லாமல் பேசுகிறாா். பாஜக ஆளும் புதுச்சேரியில் இருந்து மெத்தனால் கொண்டு வரப்பட்டுள்ளது. அந்த மாநில முதல்வா் மீது நடவடிக்கை எடுக்க மத்திய அமைச்சா் நிா்மலா கோரிக்கை விடுத்தாரா? யாா் மீது குற்றம் உள்ளது என்பது கள்ளக்குறிச்சி மக்களுக்கு தெளிவாகத் தெரியும். இதனை மக்களுக்கு நாங்கள் விளக்குவோம் என்று ஆா்.எஸ்.பாரதி கூறினாா்.