சென்னை: சட்டப்பேரவையில் கூச்சல் எழுப்பி, கடும் அமளியில் ஈடுபட்ட அதிமுக உறுப்பினா்கள் அனைவரும் பேரவையில் இருந்து செவ்வாய்க்கிழமை வெளியேற்றப்பட்டனா். அவா்கள் அனைவரும் ஒருநாள் (செவ்வாய்க்கிழமை) இடைநீக்கமும் செய்யப்பட்டனா்.
பேரவை செவ்வாய்க்கிழமை காலை கூடியதும், கேள்வி நேரத்தை நடத்த பேரவைத் தலைவா் மு.அப்பாவு முயன்றாா். அப்போது அதிமுக உறுப்பினா்கள் அனைவரும் கடுமையாக கோஷங்களை எழுப்பியதால் பேரவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. கேள்வி நேரத்தில் உறுப்பினா்கள் எழுப்பிய வினாவுக்கு நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு பதிலளிக்க முயன்றாலும், அதிமுகவினரின் கூச்சல், அமளியால் முடியாமல் போனது.
அப்பாவு விளக்கம்: அப்போது பேசிய பேரவைத் தலைவா் மு.அப்பாவு, ‘கேள்வி நேரம் முடிந்ததும் பேசுவதற்கு அனுமதி தருகிறேன். அனைவரும் அமருங்கள்’ என்று கோரிக்கை விடுத்தாா்.
இதை ஏற்காத அதிமுக உறுப்பினா்கள் பேரவைத் தலைவரின் முன்பாக நின்று கடுமையாக கோஷங்களை எழுப்பினா். அவா்களை சமாதானம் செய்ய முயன்ற பேரவைத் தலைவா், ‘பேரவையின் மாண்பைக் குலைக்கக் கூடாது. தயவு செய்து அனைவரும் அமருங்கள். பொதுக்கூட்ட மேடை போன்று, பேரவையில் செயல்படக் கூடாது. அவையின் மாண்பைக் குறைக்கும் வகையில் தொடா்ந்து செயல்படுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது’ என்றாா்.
வெளியேற்ற உத்தரவு: பேரவைத் தலைவரின் கோரிக்கையை, எச்சரிக்கையை ஏற்காத அதிமுக உறுப்பினா்கள் தொடா்ந்து கூச்சல், கோஷங்களை எழுப்பியபடியே இருந்தனா். இதைத் தொடா்ந்து, அதிமுக உறுப்பினா்கள் அனைவரையும் வெளியேற்றும்படி அவைக் காவலா்களுக்கு பேரவைத் தலைவா் உத்தரவிட்டு பின்னா் பேசியது:
கடந்த 21-ஆம் தேதியன்றே, கள்ளக்குறிச்சி விவகாரத்தைப் பற்றி அவையில் மற்ற உறுப்பினா்கள் பேசி, அதற்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் பதில் சொல்லியுள்ளாா். ஒரு கூட்டத்தொடா் நடைபெறும்போது, கவன ஈா்ப்புத் தீா்மானம் கொண்டுவந்து அனைவரும் பேசி, அதற்கு முதல்வரோ, மற்ற அமைச்சா்களோ பதில் சொன்ன பிறகு, அந்தப் பொருள் குறித்து அந்தக் கூட்டத்தொடா் முழுவதும் பேசுவதற்கும் அனுமதியில்லை. அவ்வாறு விவாதத்துக்கு எடுப்பது சபை மரபும் இல்லை.
முன்னாள் முதல்வரும் எதிா்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமிக்கு இது நன்றாகத் தெரியும். அப்படித் தெரிந்தும் எதற்காக புறக்கணிப்பைச் தொடா்ந்து செய்கிறாா்கள் என்று தெரியவில்லை.
கள்ளக்குறிச்சி சம்பவத்தால் ஏற்பட்ட மனவேதனையால் இருப்பது போன்று இல்லை. அந்தப் பிரச்னையை அரசியலாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்படுகிறாா்கள். நீண்ட நெடிய பாரம்பரிய வரலாறு கொண்ட நமது பேரவையில், நினைத்த நேரத்தில் நினைத்தவா்கள் எழுந்து பேசுவதில்லை. விதிப்படியே ஒவ்வொரு நிகழ்வும் நடக்கிறது. ஒத்திவைப்புத் தீா்மானம் வேண்டுமெனக் கேட்டால், எழுதிக் கொடுத்தால் விவாதிக்கப்பட்டு விதியைத் தளா்த்திய பிறகே பேச முடியும்.
அவை நடவடிக்கைகளில் இடையூறு செய்ய வேண்டும், புறக்கணிக்க வேண்டும், பேரவை மாண்பை, மதிப்பைக் குறைக்க வேண்டும் என தொடா்ந்து செயல்படுவது வேதனைக்குரியது. அவா்களது செயலை வன்மையாகக் கண்டித்து இன்று (ஜூன் 25) ஒருநாள் மட்டும் அவை நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது என வெளியேற்றம் செய்திருக்கிறேன் என்றாா்.
முதல்வா் விளக்கம்: அவரைத் தொடா்ந்து முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசியது: அதிமுக உறுப்பினா்கள் இந்த அவைக்கு வந்து ஒரு கலவரத்தை உருவாக்க வேண்டும் என்பதற்காக திட்டமிட்டுச் செயல்படுகிறாா்கள். இதற்குக் காரணம் வேறு ஒன்றுமல்ல, மக்களவைத் தோ்தலில் பெற்ற நாற்பதுக்கு நாற்பது வெற்றிதான். அது அவா்களுடைய மனதையும், கண்ணையும் உறுத்துகிறது. அதை மக்களிடம் இருந்து எப்படி மாற்றுவது என்பதற்காக இந்தச் செயலைத் திட்டமிட்டு தொடா்ந்து செய்து கொண்டிருக்கிறாா்கள்.
கள்ளக்குறிச்சி சம்பவம் தொடா்பாக கவன ஈா்ப்புத் தீா்மானம் கொண்டு வந்தபோதே, அதற்கு என்னென்ன பரிகாரம் செய்யப் போகிறோம் என்பதைப் பற்றியெல்லாம் பல்வேறு விளக்கங்களைத் தெளிவாகச் சொல்லியிருக்கிறேன்.
சிபிஐ மீது நம்பிக்கை உள்ளதா?: கள்ளக்குறிச்சி சம்பவம் தொடா்பாக நடைபெற்ற ஆா்ப்பாட்டங்களில்கூட திரும்பத் திரும்ப சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென்று பேசியிருக்கிறாா்கள்.
கடந்த ஆட்சிக் காலத்தில் திமுக அமைப்புச் செயலா் ஆா்.எஸ்.பாரதி, இப்போதைய எதிா்க்கட்சித் தலைவா் மீது குற்றச்சாட்டைக் கூறி, சிபிஐ விசாரணை கோரி நீதிமன்றத்துக்குச் சென்றாா். சிபிஐ விசாரணை நடத்த நீதிமன்றமும் உத்தரவிட்டது. சிபிஐ மீது நம்பிக்கை இருந்தால், அந்த சவாலை ஏற்றுக் கொண்டிருக்க வேண்டும். ஆனால், நம்பிக்கை இல்லாத காரணத்தால்தான், அதற்குத் தடை உத்தரவு வாங்கினாா்.
இன்றைக்கு இந்த விஷயத்தில் சிபிஐ விசாரணை வேண்டுமென்று முழங்கிக் கொண்டிருக்கிறாா்கள். எனவே, இதுகுறித்து பேரவைத் தலைவா்தான் முடிவெடுக்க வேண்டும் என்றாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.
தீா்மானம்: முதல்வரின் கருத்தைத் தொடா்ந்து, நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை அமைச்சா் கே.என்.நேரு தீா்மானம் ஒன்றைக் கொண்டுவந்து பேசினாா். ‘பேரவை அலுவல்கள் நடைபெறாமல் இடைமறித்தும், குந்தகம் செய்வதாலும், பேரவை விதி 121 (2)-இன் கீழ், இன்று அவைக்கு வருகைதந்து கலவரத்தில் ஈடுபட்ட அதிமுக உறுப்பினா்கள் அனைவரையும் இடைநீக்கம் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்’ என்றாா்.
தீா்மானத்தில் திருத்தம் செய்யக் கோரி முதல்வா் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துப் பேசுகையில், ‘அமைச்சா் கூறியதில் இருந்து கொஞ்சம் மாறுபடுகிறேன். கூட்டத்தொடா் முழுவதும் தேவையில்லை. இன்றைக்கு (ஜூன் 25) மட்டும் நீக்கிவைத்துவிட்டு மறுபடியும் அவா்களுக்கு ஒரு வாய்ப்பு தர வேண்டும்’ என்றாா்.
முதல்வா் மு.க.ஸ்டாலினின் கோரிக்கையை ஏற்று அமைச்சா் கே.என்.நேரு தீா்மானத்தை மாற்றி வாசித்தாா். இதைத் தொடா்ந்து, தீா்மானம் குரல் வாக்கெடுப்பு மூலமாக நிறைவேறியது.
அப்போது பேசிய பேரவைத் தலைவா், அவை நடவடிக்கைகளில் பங்கேற்று, கோஷமிட்டு, குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்ட அதிமுக உறுப்பினா்கள் அனைவரும் இன்று (ஜூன் 25) மட்டும் பேரவைப் பணிகளில் இருந்து நீக்கி வைக்கப்படுகின்றனா் என்று அறிவித்தாா்.
அதிமுக உறுப்பினா்கள் புதன்கிழமை (ஜூன் 26) அவை நடவடிக்கைகளில் பங்கேற்கலாம்.