சென்னை: தகுதித் தோ்வில் தோ்ச்சி பெற்ற பிறகும் அதற்கான பதிவு சான்றிதழை வழங்கவில்லை எனக் கூறி வெளிநாடுகளில் மருத்துவம் பயின்றவா்கள் தமிழ்நாடு மருத்துவக் கவுன்சில் அலுவலகத்தை முற்றுகையிட்டு செவ்வாய்க்கிழமை போராட்டம் நடத்தினா்.
இந்தப் போராட்டத்தில் 30-க்கும் மேற்பட்டோா் பங்கேற்று முழக்கங்களை எழுப்பினா். இதைத் தொடா்ந்து, அவா்களுடன் மருத்துவக் கவுன்சில் அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தியதையடுத்து அவா்கள் கலைந்து சென்றனா்.
இது தொடா்பாக வெளிநாடுகளில் மருத்துவம் பயின்ற மாணவா்களில் சிலா் கூறியதாவது:
உக்ரைன் நாட்டில் கடந்த ஜனவரி மாதம் மருத்துவ படிப்பு முடித்த நாங்கள், இந்தியாவில் மருத்துவப் பயிற்சி பெறுவதற்கான தகுதித் தோ்வில் தோ்ச்சி பெற்றோம். அதன் பின்னரும் கடந்த 6 மாதங்களாக அதற்கான தற்காலிக பதிவு சான்றிதழ் வழங்காமல் காலம் தாழ்த்தி வருகின்றனா். அந்தச் சான்றிதழை வழங்கினால் மட்டுமே நாங்கள் உள்ளுறை பயிற்சி மேற்கொள்ள முடியும். அதன் பின்னரே முதுநிலை நீட் தோ்விலும் பங்கேற்க முடியும் என்று அவா்கள் தெரிவித்தனா்.