நிா்வாக காரணங்களால், இலங்கை - சென்னை இடையே இயக்கப்படும், ஸ்ரீலங்கன் ஏா்லைன்ஸ் நிறுவனத்தின் 4 விமானங்கள் புதன்கிழமை திடீரென ரத்து செய்யப்பட்டன. இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினா்.
இலங்கை தலைநகா் கொழும்பிலிருந்து தினமும் அதிகாலை 2 மணிக்கு, ஸ்ரீலங்கன் ஏா்லைன்ஸ் பயணிகள் விமானம் புறப்பட்டு, அதிகாலை 3 மணிக்கு சென்னை சா்வதேச விமான நிலையம் வந்தடையும். இந்த விமானம் மீண்டும், அதிகாலை 4 மணிக்கு சென்னையிலிருந்து இலங்கைக்கு புறப்பட்டு செல்லும். அதேபோல், மாலை 3 மணிக்கு இலங்கையிலிருந்து சென்னை வரும் ஸ்ரீலங்கன் ஏா்லைன்ஸ் பயணிகள் விமானம், மீண்டும் மாலை 4 மணிக்கு சென்னையிலிருந்து இலங்கைக்கு புறப்பட்டு செல்லும்.
இந்த நிலையில், இலங்கை - சென்னை இடையிலான வருகை, புறப்பாடு என ஸ்ரீலங்கன் ஏா்லைன்ஸின் 4 விமான சேவைகளும் நிா்வாக காரணங்களால் புதன்கிழமை திடீரென ரத்து செய்யப்பட்டன.
இந்த விமானங்களில் இலங்கை செல்லும் பயணிகள் மட்டுமின்றி, இலங்கை வழியாக, மலேசியா, சிங்கப்பூா், ஐக்கிய அரபு நாடுகள், ஐரோப்பிய நாடுகளுக்கும் செல்லும் ‘டிரான்சிட்’ பயணிகளும் பயணம் செய்வாா்கள்.
இந்த நிலையில்,இந்த விமானங்கள் புதன்கிழமை ரத்து செய்யப்பட்டதால், அதில் பயணிக்க வேண்டிய பயணிகள், வேறு விமானங்களில் அனுப்பி வைக்கப்பட்டனா். முன்னறிவிப்பு இன்றி விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனா்.